
மஇகாவின் உணர்வுகளோடு இரண்டறக் கலந்து வாழ்ந்த அறிவாற்றல் மிக்க ஆளுமை டான்ஸ்ரீ வடிவேலு என்று மஇகா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் புகழாரம் சூட்டியுள்ளார்.
மஇகாவில் பல பதவிகளை அலங்கரித்ததோடு, அரசாங்கத்திலும் பொறுப்பு வகித்த சட்டமன்ற உறுப்பினராக, செனட்டராக, நாடாளுமன்ற மேலவையின் தலைவராகப் பணியாற்றிய மதிப்பிற்குரிய தான்ஸ்ரீ ஜி.வடிவேலு நம்மை விட்டுப் பிரிந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், ஆழ்ந்த வருத்தமும் அடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மேலவையின் துணைத் தலைவராக டான்ஸ்ரீ எஸ்.ஓ.கே.உபைதுல்லா நீண்ட காலம் பணியாற்றியிருந்தாலும், சுழல் முறையில் நாடாளுமன்ற மேலவைத் தலைவர் மஇகாவுக்கு வழங்கப்பட்டபோது அந்தப் பதவியை வகித்த பெருமை கொண்டவர் தான்ஸ்ரீ வடிவேலு. அவருக்குப் பிறகு இரண்டாவது தடவையாக மஇகா சார்பில் அந்தப் பதவியை வகித்தவன் என்ற முறையில் எனக்கு பல வகையிலும் ஆலோசனைகளையும் கருத்துகளையும் வழங்கியவர் தான்ஸ்ரீ வடிவேலு என்பதை இந்த வேளையில் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.
எனது அரசியல் பயணத்தில் பல முக்கியத் தருணங்களில் அவர் எனக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறார் என்பதையும் நான் இந்த வேளையில் நினைவு கூர விரும்புகிறேன்.
அவர் ஒரு சிறந்த வழக்கறிஞராகவும் திகழ்ந்தார். பல தருணங்களில் மஇகாவுக்கு முக்கிய சட்ட ஆலோசனைகள், வழிகாட்டுதல்களை அவர் வழங்கியிருக்கிறார். மஇகாவின் சார்பில் பல வழக்குகளில் அவர் பிரதிநிதித்து வழக்காடியிருக்கிறார்.
தான்ஸ்ரீ மாணிக்கவாசகத்தின் தலைமைத்துவத்தின் கீழ் புக்கிட் ராஜா சட்டமன்ற உறுப்பினராக அவர் 2 தவணைகள் சிறப்பாக செயலாற்றினார். பின்னர் துன் சாமிவேலு அவர்களின் தலைமைத்துவத்தில் மஇகாவின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டு பல ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றினார்.
துன் சாமிவேலு அவர்களால் செனட்டராகவும் நியமிக்கப்பட்டார். நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவி சுழல் முறையில் தேசிய முன்னணி கட்சிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற நிலை வந்தபோது, வடிவேலுவையே அந்தப் பதவிக்கு பரிந்துரை செய்தார் துன் சாமிவேலு.
நாடாளுமன்ற மேலவைத் தலைவர் பதவியிலும் சிறப்பாக செயல்பட்டு மஇகாவுக்கும் இந்திய சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்தார் வடிவேலு அவர்கள்.
தான்ஸ்ரீ வடிவேலு அவர்களின் சிறப்பு என்னவென்றால், தனது சட்ட அறிவாற்றலை மஇகாவுக்கு பல முனைகளிலும் வழங்கினார் என்பதுதான்! அத்துடன் மஇகா தலைமைத்துவத்துடன் எவ்வளவுதான் கருத்து முரண்பாடு கொண்டிருந்தாலும் எல்லாக் காலங்களிலும் அவர் ஓர் உண்மையான மஇகாகாரராகவே வாழ்ந்து மறைந்தார். எவ்வளவு பிரச்சனைகள் இருந்தபோதிலும், அவர் மஇகாவை குறைசொல்வதையோ, மாற்று கட்சியில் சேர்வதைப் பற்றியோ பேசி யாரும் கேட்டிருக்க முடியாது.
துன் சாமிவேலுவுடன் அவர் ஆரம்ப காலங்களில் கருத்து முரண்பாடு கொண்டிருந்தாலும், தேர்தல்களில் துன் அவர்களின் அணிக்கு எதிராகப் போட்டியிட்டிருந்தாலும், பிற்காலத்தில் அவர் துன் அவர்களுடன் நெருக்கமாக இணைந்து, தோள்கொடுத்து, அரசியல் பணியாற்றினார்.
இறுதிவரை மஇகாவுக்கு விசுவாசமாக வாழ்ந்து மறைந்த அவரின் அரசியல் நிலைப்பாட்டை நாம் அனைவரும் ஒரு பாடமாகக் கொள்ள வேண்டும். மஇகாவின் உணர்வுகளோடு இரண்டறக் கலந்து இறுதிவரை வாழ்ந்து மறைந்த தான்ஸ்ரீ வடிவேலு மட்டுமின்றி, அவரின் நெருங்கிய உறவினர்கள் குடும்பத்தினர் பலரும் மஇகாவின் போராட்டங்களில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் என்பதும் அவர்களின் அந்த முடிவுக்கு தான்ஸ்ரீ வடிவேலு பக்கபலமாக இருந்தார் என்பதும் உண்மை.
தான்ஸ்ரீ வடிவேலுவின் சீரிய அரசியல் பணிகளை, கட்சிப் பணிக்கான அவரின் பங்களிப்புகளை நன்றியோடு அனைவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். அவரின் இழப்பு கட்சிக்கு ஈடு செய்ய முடியாத ஒன்றாகும்.
தான்ஸ்ரீ வடிவேலுவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் அவரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும்
தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன்
வெளியிட்ட இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
