
புத்ரா ஜெயா, ஜன 6-
எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கும் முன்னாள் பேரரசரின் கூடுதல் உத்தரவு இருப்பதை நிரூபிக்க நீதித்துறை மறுஆய்வு நடவடிக்கைகளைத் தொடங்க முன்னாள் பிரதமர் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் வெற்றி பெற்றுள்ளார்.
மூன்று பேர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கின் தகுதியை விசாரிக்கும் போது புதிய ஆதாரங்களைச் சேர்க்க முன்னாள் பிரதமரின் விண்ணப்பத்திற்கு அனுமதி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய ஆதாரங்களை அறிமுகப்படுத்த லாட் & மார்ஷலில் உள்ள நிபந்தனைகளை டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பூர்த்தி செய்துள்ளார் என்று நீதிபதி ஃபிரூஸ் ஜாஃப்ரில் கூறினார்.
கடந்த ஜூலை மாதம் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு 16ஆவது பேரரசராக இருந்த பகாங் சுல்தானிடம் இருந்து டத்தோஸ்ரீ நஜிப் கூடுதல் உத்தரவைப் பெற்றதாக ஃபிரூஸ் கூறினார்.
அரசாங்கம் உறுதியான மறுப்பு ஆதாரங்களை வழங்கவில்லை என்றும் அவர் கூறினார்.
நீதிபதி அசஹஹரி கமால் ரம்லி ஃபிரூஸின் கருத்தை ஏற்றுக்கொண்டார்.
இருப்பினும், மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வுக்குத் தலைமை தாங்கிய நீதிபதி அசிசா நவாவி இதற்கு மறுப்பு தெரிவித்தார்..
