
அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டிரம்ப் கடந்த 20-ந்தேதி பதவி ஏற்றார். வழக்கமாக ஜனாதிபதி பதவி ஏற்பு விழா என்பது வாஷிங்டன் நகரில் உள்ள கேபிடல் எனப்படும் பாராளுமன்ற கட்டிட வளாகத்தில் நடைபெறும். இதில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டு பார்வையிடலாம்.
ஆனால் இந்த முறை கடும் பனிப்பொழிவு காரணமாக, ஜனாதிபதி பதவி ஏற்பு விழா பாராளுமன்ற கட்டிட உள்ளரங்கில் நடைபெற்றது. இந்த விழாவை நேரலையில் பார்க்குமாறு டிரம்ப் கூறியிருந்தார்.
அதன்படி பதவியேற்பு நிகழ்ச்சிகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. இதனை அமெரிக்காவில் 2 கோடியே 46 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இது மிகவும் குறைந்த எண்ணிக்கை என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஜோ பைடன் பதவி ஏற்பு நிகழ்ச்சியை 3 கோடியே 38 லட்சம் பேர் நேரலையில் பார்த்துள்ளனர் என்றும், 2017-ம் ஆண்டு டிரம்ப் முதன் முறையாக ஜனாதிபதியாக பதவி ஏற்ற நிகழ்ச்சியை 3 கோடியே 6 லட்சம் பேர் நேரலையில் பார்த்துள்ளனர் என்றும் நீல்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரம் பிற முக்கிய தொலைக்காட்சி நிறுவனங்களில் இந்த எண்ணிக்கையில் மாறுபாடு உள்ளது.
