
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், ரசகுல்லா சாப்பிட்ட 11 வயது சிறுவனை சமையல்காரர் ஒருவர் எரியும் அடுப்பில் தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமண விருந்து நடைபெற்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த சிறுவன் ஒரு ரசகுல்லாவை எடுத்துச் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சமையல்காரர், சிறுவனை தாக்கியதோடு மட்டுமின்றி, அருகில் எரிந்து கொண்டிருந்த தணல் அடுப்பில் தூக்கி வீசியுள்ளார்.
இந்தக் கொடூரச் சம்பவத்தில், சிறுவனின் முதுகு மற்றும் கைகள் கடுமையாக தீக்காயமடைந்தன. அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் மற்றும் விருந்தினர்கள், சிறுவனை மீட்டு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தற்போது, அந்தச் சிறுவன் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவத்துக்குப் பிறகு, குற்றவாளியான சமையல்காரர் இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார். சிறுவனின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஒரு ரசகுல்லாவுக்காக சிறுவன் மீது நடத்தப்பட்ட இந்த மனிதாபிமானமற்ற வன்முறைச் செயல், அப்பகுதி மக்களிடையே கடும் கண்டனத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
