29.6 C
Kuala Lumpur
Saturday, January 24, 2026

Vetri

பினாங்கில் கட்சிகள் மாறுமா? பாஸ்-உரிமை கட்சிகள் கை கோர்க்கும் சாத்தியத்தைக் கோடி காட்டும் Dr. ராமசாமி

பினாங்கில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியுடன் உரிமைக் கட்சி கை கோர்க்கும் சாத்தியத்தை, அதன் தலைவர் பேராசிரியர் Dr பி.ராமசாமி கோடி காட்டியுள்ளார்.

பினாங்கில், பெரிக்காத்தானுக்கு சீனர்களின் வாக்குகளைத் திரட்டுவதில் கெராக்கான் கட்சி தடுமாறுகிறது.

சீனர்களின் ஆதரவுக் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருப்பதால், மாநில வாக்காளர்களில் 12 விழுக்காடாக இருக்கும் இந்தியர்களின் பக்கம் பெரிக்காத்தான் குறிப்பாக பாஸ் கட்சி கவனத்தைத் திருப்புகிறது.

அவ்வகையில் பாஸ் மற்றும் இந்தியர் அடிப்படையிலான உரிமை கட்சி இடையே அதிகாரப்பூர்வமற்ற பேச்சு வார்த்தைகள் தொடங்கியுள்ளன.

தேர்தல் உடன்பாடு எதுவும் இன்னும் எட்டப்படவில்லை என்றாலும், ஒரு மலாய்-இந்திய அரசியல் ஒத்துழைப்பை சோதிப்பதற்கான ஆரம்ப முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

ஒருவேளை பினாங்கில் இப்புதிய நகர்வு சாத்தியமானால், தேசிய அளவில் ஒரு பலமான எதிர்கட்சிக் கூட்டணிக்கு இது அச்சாரம் போடும்.

பெரிக்காத்தானுக்கு இந்தியர்களின் ஆதரவும் சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை; இப்படியிருக்க உரிமைக் கட்சியுடன் கை கோர்ப்பதன் மூலம் பெரிக்காத்தான் இலாபம் அடைய முடியும்.

குறிப்பாக 35 விழுக்காட்டு இந்திய வாக்காளர்களைக் கொண்ட பிறை போன்ற தொகுதிகளில் உரிமைக் கட்சி கட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என ராமசாமி தனது facebook பதிவில் கூறினார்.

இவ்வேளையில் அவ்விவகாரம் குறித்து பேசிய பெரிக்காத்தான் உறுப்புக் கட்சியான MIPP எனப்படும் மலேசிய இந்தியர் மக்கள் கட்சி, பினாங்கில் இந்தியர்-மலாய் தேர்தல் உடன்பாட்டுக்குத் தலைமையேற்கத் தயார் என்றது.

இது குறித்து பெரிக்காத்தான் உச்சமன்ற அளவிலும் கூட்டணிக் கட்சிகள் இடையேயும் தான் பேச வேண்டுமென, MIPP தலைவர் பி.புனிதன் கூறினார்.

வரும் மாதங்களில் பினாங்கில் பெரியப் பேரணியை நடத்தி MIPP தனது பலத்தைக் காட்டுமென்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles