
நாட்டில் இவ்வாண்டு கிட்டத்தட்ட 10,000 தமிழ் மாணவர்கள் வேறு மொழிப் பள்ளிகளில் துவக்கக் கல்வியை தொடங்கியுள்ளனர்.
இதனால் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான பள்ளித் தவணை நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
இந்த புதிய கல்வியாண்டில் நாடு தழுவிய நிலையில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளில் 11,021 மாணவர்கள் மட்டுமே முதலாமாண்டில் சேர்ந்துள்ளனர்.
இது கடந்த 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 547 மாணவர்கள் குறைந்துள்ளனர்.
சிலாங்கூர் மாநிலத்தில் ஆக அதிகமாக 3,574 மாணவர்கள் தமிழ்ப்பள்ளியில் இணைந்துள்ளனர்.
ஜொகூரில் 2,013, பேராக்கில் 1,615, நெகிரி செம்பிலானில் 1,038, கெடாவில் 923, பினாங்கில் 824, கோலாலம்பூரில் 523, பகாங்கில் 285, மலாக்காவில் 217, பெர்லிசில் 8, கிளந்தானில் 1 மாணவரும் தமிழ்ப்பள்ளியில் சேர்ந்துள்ளனர்.
11,000 மாணவர்கள் என்றால் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப்பள்ளியின் முதலாம் ஆண்டில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
இந்த சரிவுக்கு பிறப்பு விகிதம் குறைவது முக்கியக் காரணமாக உள்ளது.
அதே வேளையில் தமிழ்ப்பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை.
சில பகுதிகளில் தமிழ்ப்பள்ளிகள் இல்லாததுடன், சீனப் பள்ளிகள், தேசியப் பள்ளிகள், அனைத்துலகப் பள்ளிகளின் மீதான பெற்றோரின் ஈர்ப்பும் ஒரு முக்கியக் காரணமாக உள்ளது.
இதனால் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது என்று மலேசியத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றத்தின் தலைவர் எஸ்.எஸ். பாண்டியன் கூறினார்.
சூழ்நிலை இப்படி இருக்க இவ்வாண்டு 10 ஆயிரம் மாணவர்கள் வேறு மொழிப் பள்ளிகளில் இணைந்திருப்பதாக தகவல்கள் கூறுகிறது.
அதே வேளையில் மற்ற ஆண்டுகளில் பயிலும் மாணவர்களும் இடையில் வேறு பள்ளிகளுக்கு மாறி செல்கின்றனர். இந்த அவல நிலை மாற தமிழ் சமுதாயமும் தமிழ் ஆர்வலர்களும் என்ன செயல் திட்டம் வைத்துள்ளனர் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலை நீடித்தால் தமிழ்ப்பள்ளிகளின் நிலை கேள்விக் குறியாகி விடும் என தமிழ் ஆர்வலர்கள் வருத்தத்துடன் கூறுகின்றனர். – Nambikkai Online
