
வரவிருக்கும் 16ஆவது ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் மசீச (MCA) கட்சி மொத்தம் 15 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாகவும், அவற்றில் ஏழு புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதன் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் தெரிவித்துள்ளார்.
ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் தேசிய முன்னணியை (BN) பிரதிநிதித்துவப்படுத்தும் 15 மசீச வேட்பாளர்களில், இளைஞர் மற்றும் மகளிர் பிரிவுகளைச் சேர்ந்த பல புதிய தலைவர்களும் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார். அதேவேளையில், கட்சியின் நான்கு தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
மீண்டும் களமிறக்கப்பட்டுள்ள தற்போதைய உறுப்பினர்கள் லிங் தியான் சூன் (யோங் பெங்), லீ டிங் ஹான் (பாலோ), டான் சோங் (பெகோக்) மற்றும் டான் எங் மெங் (பெக்கான் நேனாஸ்) ஆகியோர் என அவர் தெரிவித்தார். இவர்களின் அனுபவமும் புதிய வேட்பாளர்களின் ஆற்றலும் கட்சிக்கு வலுசேர்க்கும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டார்.
மேலும், இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஏழு வேட்பாளர்கள் இதற்கு முன்பு எந்தத் தேர்தலிலும் போட்டியிட்டதில்லை என்றும், புதிய தலைமுறையை அரசியலுக்குக் கொண்டு வருவதற்கான கட்சியின் முயற்சியின் ஒரு பகுதியாகவே அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் டத்தோஸ்ரீ வீ கா சியோங் கூறினார்.



