
ஷா ஆலம் விளையாட்டரங்கை இடிக்கும் பணி இதுவரை 78 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட முன்னதாகவே இப்பணிகள் நிறைவடைந்து வருவதாக மந்திரி புசார் தெரிவித்தார்.
அரங்கை இடிக்கும் பணிகள் அட்டவணையின்படி சீராக நடைபெற்று வருவதாகவும் புதிய மைதானத்தின் கட்டுமானப் பணிகள் மே அல்லது ஜூன் மாதத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
அரங்க இடிப்புப் பணிகளின் மேம்பாடு நிர்ணயித்த இலக்கைவிட முன்னதாகவே உள்ளது. நாங்கள் 70 விழுக்காட்டை (தற்போது) இலக்காகக் கொண்டிருந்தோம். ஆனால் இப்போது 78 விழுக்காட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளன என அவர் குறிப்பிட்டார்.
அனைத்தும் திட்டமிட்டபடி நடப்பதை நான் காண்கிறேன். மே அல்லது ஜூன் மாதத்தில் ஷா ஆலம் புதிய அரங்கின் கட்டுமானம் தொடங்கி 2027 இல் நிறைவடையும் என்று இன்று அவர் கூறினார்.
2026 மலேசியா விளையாட்டுப் போட்டிகளுக்கான (சுக்மா) சிலாங்கூரின் ஏற்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்த அமிருடின், விளையாட்டுப் போட்டிகளின் அதிகாரப்பூர்வ தொடக்க மற்றும் நிறைவு நிகழ்வுகளுக்கான இரண்டு இடங்களை, அதாவது கோலாலம்பூரில் உள்ள மெர்டேக்கா அரங்கம் மற்றும் சிப்பாங் அனைத்துலகப் பந்தயத் தடம் ஆகியவற்றை மாநில அரசு இன்னும் பரிசீலித்து வருவதாகத் தெரிவித்தார்.
நமக்கு இரண்டு தேர்வுகள் உள்ளன. முதலாவதாக, 40,000 பார்வையாளர்களை அமரக்கூடிய மெர்டேக்கா அரங்கம் உள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மட்டுமே அங்கு சவாலாக உள்ளது என்றார் அவர்.
