
பூச்சோங் மாரியம்மன் ஆலயத்தில் தமிழர்களுக்கென்று ஒரு பெருமை மண்டபம் – பல்நோக்கு பயன்பாட்டிற்கான கட்டடம் அமைக்கும் திட்டத்தில் முக்கிய அத்தியாயம் எழுதப்பட்டது. இதற்காக அண்மையில் நடைபெற்ற நிதி திரட்டும் விழா, கலாசாரத்துக்கும் சமூக சேவைக்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு விழாவாக சிறப்பாக நடைபெற்றது.
தத்தோ புத்திரி சிவம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சமூக முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றும் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு விழாவை மெருகேற்றினர்.

இந்த முயற்சியின் நெஞ்சிலிருக்கும் நாயகன் – கட்டிட குழுத் தலைவர் பாஸ்கரன், தனது அரும்பாடுகள் மற்றும் திரளான ஆதரவாளர்களின் ஒத்துழைப்பால், பல்நோக்கு மண்டபத்தின் கட்டுமான பணிகள் பெரும்பான்மையாக முடிவடைந்துள்ளன. மீதமுள்ள சிறு பணிகளுக்காகவே இந்த நிதி திரட்டும் விழா நடத்தப்பட்டது.
பாஸ்கரன் உரையில் கூறினார்:
“சுற்றிலும் சீனர்களுக்கான மண்டபங்கள் நிரம்பி உள்ளன. ஆனால் தமிழர்களுக்கென்று ஒரு பெருமை மண்டபம் இல்லாதது வேதனையானது. அதை மாற்றும் முயற்சியிது! இது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் சொத்து.”
இந்த விழாவில் டத்தோ ஸ்ரீ சரவணன் அதிகாரப்பூர்வமாக வர இருந்தாலும், வேலை காரணமாக வர இயலவில்லை. இருப்பினும், அவர் முழு ஆதரவு வழங்கியதையும், அவருக்கும் நன்றியும் நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.

மிகுந்த உற்சாகத்துடன் நடந்த நிகழ்வில் உள்நாட்டு மற்றும் தமிழக கலைஞர்கள் இணைந்து பரதநாட்டியம், இசை, நாடகம் என பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மூலம் பார்வையாளர்களை மகிழ்ச்சியில் மூழ்கச் செய்தனர்.
கவிமாறன் தனது கலகலப்பான அறிவிப்புகளால் ஆரம்பம் முதல் இறுதி வரை நிகழ்வை ஓர் விழாக்கோலமாக எடுத்துச் சென்றார்.
