
கோலாலம்பூர் லெபோ அம்பாங் இந்திய பாரம்பரிய வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டம் மிக விமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் முக்கிய விருந்தினராக மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இவ்விழாவில் உள்ளூர் கலைஞர்கள் கலந்து கொண்டு ஆடல், பாடல் நிகழ்ச்சிகளால் நிகழ்வை சிறப்பித்தனர்.
பின்னர் உரையாற்றிய டத்தோஸ்ரீ எம். சரவணன்,
“மலேசிய இந்தியர்கள் மூன்று குழுக்களாக இந்த நாட்டுக்கு வந்தனர் — தொழில்முறை நிபுணர்கள், தோட்டத் தொழிலாளர்கள், மற்றும் வணிகர்கள். குறிப்பாக நகரத்தார் சமூகத்தினர் கோலாலம்பூரில் முதன்முதலில் உருவாக்கிய இடம் தான் லெபோ அம்பாங்.
ஆகவே இந்த இடத்திற்கு ‘செட்டித் தெரு’ என்று பெயர் சூட்டுமாறு கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜலேஹா முஸ்தபா அவர்களிடம் வேண்டுகிறேன்.
வரலாறு நிலைத்திருக்க வேண்டும் என்றால் அதன் பூர்வீகமும், தனித்துவமும் காக்கப்பட வேண்டும்,” என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜலேஹா முஸ்தபா,
“இந்த கோரிக்கை நிச்சயமாக பரிசீலிக்கப்படும்,” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வினை நாடறிந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் கவிமாறன் சிறப்பாக வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.