
ஜோகூர் – கங்கார் பூலாய் மலையாலும் முருகபெருமான் கோவிலை கூலாய் நகராண்மைக் கழகம் இடித்ததையடுத்து, ஆலய பக்தர்கள் சங்கத்துடன் ஜோகூர் ஜ.செ.க தலைவர் தியோ நீ சிங் சந்திப்பை நடத்தினார்.
சில ஜ.செ.க தலைவர்கள் கலந்து கொண்ட இச்சந்திப்பில், ஆலய நிர்வாகம் எதிர்கொள்ளும் உண்மை நிலை, இடிப்பு நடவடிக்கையின் பின்னணி மற்றும் சமூகத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் பற்றிய நிலவரங்கள் தெரிவிக்கப்பட்டது.
இச்சந்திப்பு அக்கறையும் ஒற்றுமையும் வெளிப்படுத்தும் அடையாளமாக நடந்ததுடன், விவேகத்துடனும், நீதியுடனும் சமூக ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்ட தீர்வை நோக்கி உரையாடல் அமைந்ததாக தொடர்பு துணையமைச்சருமான தியோ கூறினார்.
“வழிபாட்டுத் தலங்கள் புனித இடங்கள். ஒவ்வொரு சமூகத்திற்கும் இது ஆழமான அர்த்தத்தைக் கொண்டுள்ளது எனும் ஜ.செ.க நிலைப்பாட்டிற்கு ஏற்ப எனது நிலைப்பாடும், தெளிவாகவும் நிலையானதாகவும் உள்ளது. எனவே, வழிபாட்டுத் தலங்கள் சம்பந்தப்பட்ட எந்தவொரு பிரச்சினையும் முழுமையான மரியாதை, நுணுக்கமான அணுகுமுறை மற்றும் அறிவுடனான தீர்வுடன் கையாளப்பட வேண்டும்,” என தெரிவித்தார்.
அதே நேரத்தில், நில மேலாண்மை மற்றும் நகரத் திட்டமிடல் உள்ளிட்ட அம்சங்களில் தொடர்புடைய அதிகாரிகளின் சட்ட கட்டமைப்பையும் அதிகார வரம்பையும் தாம் முழுமையாக மதிப்பதாக தியோ தெரிவித்தார்.
சட்டங்கள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல், மனிதாபிமானம், சமூகத்தின் நம்பிக்கை, இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையிலான நல்லிணக்கம் ஆகியவை சிறப்பான, பொறுப்புள்ள நிர்வாகத்தின் அடிப்படையாக உரிய முக்கியத்துவத்துடன் கருதப்பட வேண்டும் என கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ வலியுறுத்தினார்.
சமூக நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தைப் பாதுகாக்கப்படுவதோடு, ஆக்கபூர்வமான அணுகுமுறை மூலம் இவ்விவகாரத்திற்கு உரிய கவனம் செலுத்தப்பட்டு விரைவில் தீர்க்கப்படும் என தியோ நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக, கோவில் நிர்வாகம் இவ்விவகாரத்திற்கு தீர்வு காணவும், பரிசீலனை வழங்கவும் கோரி ஜோகூர் மாநில முதலமைச்சருக்கு மகஜர் ஒன்று சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இச்சந்திப்பில், சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன், செனாய் சட்டமன்ற உறுப்பினர் வோங் போர் யாங், மலாக்கா ஜ.செ.க துணைத் தலைவர் ஜி. சமிநாதன் மற்றும் ஜோகூர் ஜ.செ.க உதவிச் செயலாளர் கார்த்தியாயிணி ஜெயபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
