
பத்து கேவ்ஸ் இந்திய செட்டில்மென்ட் பகுதியில் வசித்து வரும், வசதியற்ற மற்றும் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள், நீண்ட காலமாக தங்களுக்கு உரிய நில உரிமை வழங்கப்பட வேண்டும் எனப் பல ஆண்டுகளாக போராடி வந்தனர்.
இந்த நீண்டநாள் பிரச்சினை தற்போது தீர்வை நோக்கி நகர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கிய காரணமாக, மலேசிய தமிழர் இயக்கத்தின் தேசிய தலைவர் ஸ்ரீ ரமேஷ் அவர்கள் மேற்கொண்ட தொடர் முயற்சிகளும் போராட்டங்களும் அமைந்துள்ளன. பல ஆண்டுகளாக அவர் இக்குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்காக தொடர்ந்து போராடி, சம்பந்தப்பட்ட பல்வேறு தலைவர்களை நேரில் சந்தித்து, குடியிருப்புவாசிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெளிவாக எடுத்துரைத்தார். மேலும், பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்து இந்த விவகாரத்தை பொதுவெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.
இந்த தொடர் முயற்சிகளின் விளைவாக, இப்பிரச்சினை தற்போது முடிவுக்கு வரக்கூடிய நிலையை எட்டியுள்ளது. செலாங்கூர் மாநில முதலமைச்சர் (மந்திரிபெசார்) டத்தோ’ ஸ்ரீ அமிருதீன் ஷாரி அவர்கள், இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு ஏற்படுத்தித் தருவதாக உறுதி அளித்துள்ளார். இது குறித்து அவர் தனது முகநூல் (Facebook) பக்கத்திலும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், குடியிருப்புவாசிகளின் பிரச்சினையை தாமதப்படுத்தாமல் உடனடியாகத் தீர்வு வழங்க வேண்டும் என ஸ்ரீ ரமேஷ் அவர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
மேலும் அவர் பேசுகையில்,
“இந்த போராட்டத்திற்கு எங்களுக்கு தொடர்ந்து பக்கபலமாக இருந்த அனைத்து பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் ஊடகங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், பல ஆண்டுகளாக இந்தப் பிரச்சினைக்காக எங்களுடன் தோளோடு தோள் நின்று பாடுபட்ட இக்குடியிருப்பு மக்களுக்கும் எனது நன்றிகள்,” என்று தெரிவித்தார்.
