
ஐயப்ப சுவாமி யாத்திரிக பயணிகளை நேற்று இங்குள்ள கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பாத்தேக் ஏர் விமான நிறுவனம் சிறப்பு ஏற்பாடுகளுடன் பெருமையுடன் வழியனுப்பியது.
சிறப்பு பயணத் தடம் ஏற்படுத்தப்பட்டு 140 இந்த யாத்திரிக பயணிகள் திருச்சிக்கு பாத்தேக் ஏர் விமானத்தில் பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் புறப்பட்டனர்.
திருச்சிக்கு புறப்படுவதற்கு முன்னதாக இந்த யாத்திரிக பயணிகளுக்கு விமான நிலைய வரவேற்பு கூடத்தில் பாத்தேக் ஏர் ஏற்பாட்டில் உணவு மற்றும் பானங்கள் உபசரிக்கப்பட்டது.
அனைத்து யாத்திரிக பயணிகளுக்கும் பாத்தேக் ஏர் அன்பளிப்பு பைகளை வழங்கியது.
ஐயப்ப பாடல் மற்றும் மேளதாளத்துடன் இந்த பயணிகள் வழி அனுப்பப்பட்டனர்.
இந்த யாத்திரிக பயணிகளுக்கு என்ரிக்கோ’ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி வி. ராஜேந்திரன் நெய் டின்களை வழங்கினார்.
இந்த யாத்திரிக பயணிகளை வழியனுப்பும் நிகழ்ச்சிக்கு சிறப்பு பிரமுகர்களாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரியுமான குணராஜ் ஜோர்ஜ் மற்றும் பாத்தேக் ஏர் இயக்குனர் ராமதாஸ் கலந்து கொண்டனர்.
இதனிடையே இந்த அர்த்தமுள்ள பயணம் மற்றும் சமய பாரம்பரியத்திற்கு முழுமையான ஆதரவை வழங்கி வரும் பாத்தேக் ஏர் விமான நிறுவனத்திற்கு தாம் நன்றி கூறுவதாக குணராஜ் கூறினார்.
பாத்தேக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி இந்த விவகாரத்தில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியதாக அவர் தெரிவித்தார்.

போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக், மலேசியா ஏர்போர்ட் பெர்ஹாட், குடி நுழைவுத் துறை உட்பட அனைத்து தரப்பினருக்கும் இவ்வேளையில் தாம் தமது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக இந்த விவகாரத்தில் போக்குவரத்து அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ ஜானா சந்திரன் முனியன் அதிக கவனம் செலுத்தி யாத்ரிக பயணத்தை வெற்றியடைய செய்தார் என்றார் அவர்.
இரண்டாவது ஆண்டாக பாத்தேக் ஏர் ஐயப்ப சுவாமி பயணிகளுக்கு இந்த வசதிகளை செய்து தந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மலேசியாவிலிருந்து ஆண்டுதோறும் சுமார் 50,000 ஐயப்ப சுவாமி பயணிகள் யாத்ரிக பயணத்தை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இவ்வேளையில் பாத்தேக் ஏர் விமான நிறுவனம், ஏர் ஆசியா மற்றும் மலேசியா ஏர்லைன்ஸ் ஆகிய தரப்பினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.
இதனிடையே இந்த யாத்திரிக பயணத்தின் முக்கியத்துவத்தை தாங்கள் உணர்ந்துள்ளதாக பாத்தேக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.
இந்த யாத்திரிக பயணத்திற்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்து தருவது தங்களின் கடமைகளில் ஒன்று என அவர் தெரிவித்தார்.
ஐயப்ப சுவாமி யாத்திரிகம் பக்தர்களுக்கு ஆழமான ஆன்மிகத்தை கொண்டுள்ளது என்றார் அவர்.
இந்த யாத்திரிக பயணம் கவனமாக, மதிப்பாக மற்றும் பாரம்பரியத்தை கொண்டிருக்க வேண்டும் என்பதை தாங்கள் உணர்ந்துள்ளதாக அவர் சொன்னார்.
இந்த ஆன்மீக பயணம் பக்தர்களுக்கு அர்த்தமுள்ளதாக மற்றும் மறக்க முடியாத அனுபவமாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இந்த சமய பயணம் வெற்றி அடைய சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடன் பாத்தேக் ஏர் அணுக்கமாக ஒத்துழைத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
பாத்தேக் ஏர் தொடர்ந்து இது போன்ற யாத்திரிக பயணத்திற்கு ஆதரவு வழங்கி வரும் என டத்தோ சந்திரன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சி வெற்றியடைய பாத்தேக் ஏர் விமான நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைவர் பவாணி வீர ஐயா மற்றும் நிறுவனத்தில் அதிகாரி சுரேஷ் ஆகியோர் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்.
