26.4 C
Kuala Lumpur
Sunday, April 19, 2026

Vetri

முன்னோர்கள் கட்டிக் காத்த ஒற்றுமையை ஒரு நொடியில் சிதைக்க விட வேண்டாம்! – ஜனாப் முகமது பின் காதிர் அலி!

30 ஆண்டுகளாக இந்த நாட்டில் பல சமூக மக்களுக்கு உதவி செய்து வரும் கெபிமா இயக்கம், 27-வது முறையாக நோன்பு பெருநாளை முன்னிட்டு வசதி குறைந்த மக்கள் மற்றும் சிறப்பு தேவையுடைய குழந்தைகளுக்கு நோன்பு பெருநாள் அன்பளிப்புகளும் உணவுப் பொருட்களும் வழங்கியது. இந்த நிகழ்ச்சி நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெற்றது.


இந்த நாட்டின் மக்கள் பெருநாள் காலங்களில் சந்தோஷமாகவும் ஒற்றுமையுடனும் பெருநாளைக் கொண்டாடும் வகையில் கெபிமா கடந்த 27 ஆண்டுகளாக இந்த உதவியை செய்து வருவதாக, கெபிமாவின் தோற்றுநர் ஜனாப் முகமது பின் காதிர் அலி தெரிவித்தார்.


சமீபகாலமாக நடைபெற்று வரும் சில சம்பவங்களை பார்த்து மிகவும் வருத்தம் அடைவதாகவும் அவர் கூறினார்.
மலேசியாவின் அடையாளமே பல்லின மக்களின் சமயத்தையும் கலாச்சாரத்தையும் மதித்து ஒற்றுமையாக வாழும் நாடு என்பதே என்று அவர் குறிப்பிட்டார்.


இந்த ஒற்றுமையை கட்டிக் காக்க நம் முன்னோர்கள் செய்த தியாகங்களும் நடவடிக்கைகளும் சில மதவெறி நபர்களால் ஒரு நொடியில் சிதைந்து விடக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.


இப்போதே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டால் இந்த நாட்டின் அடையாளமும் அமைதியும் பாதிக்கப்படும் என மூத்த சமூக சேவகரான ஜனாப் முகமது பின் காதிர் அலி கவலை தெரிவித்தார்.
அதே நேரத்தில் இஸ்ரேல்–அமெரிக்கா–ஈரான் மோதலால் பல நாடுகள் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், சாணக்கியமான முன்னேற்பாடுகளை செய்து, அதே நேரத்தில் சிக்கன நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களை தாம் பாராட்டுவதாகவும் அவர் கூறினார்.


அரசு அதிகாரிகளின் வெளிநாட்டு பயணங்களை ரத்து செய்ததும், நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்ச்சிகளை ரத்து செய்ததும், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு இருப்பு நிலையை சரியாக பராமரித்து வருவதும் பாராட்டத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார்.


இந்த நிகழ்ச்சியில் சுமார் 500 பொதுமக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் டத்தோ வீர நைனா முகமாட் பின் சுல்தான் அப்துல் காதிர், முகமாட் பின் அப்துல் காதிர், டத்தோ ஹாஜி ஹிஷாமுடீன், டான் ஸ்ரீ உபையத்துல்லா, டத்தோ ஹாஜி டாக்டர் சையட் இப்ராஹிம், டத்தோ சேக் ஜமீல், அலி சாஜாஹான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


மேலும், கெபிமா தலைவர் முகமட் இப்ராஹிம் தலைமையில் சங்கம் சிறப்பாக செயல்பட்டு பல புதிய சிந்தனைகளை முன்னெடுத்து வருவது பாராட்டத்தக்கது என அவர்கள் இப்ராஹிம் அவர்களை பாராட்டினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles