
கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு சமூக மக்களுக்கு உதவி செய்து வரும் கெபிமா (KEPIMA) இயக்கம், இந்த ஆண்டும் 27வது முறையாக நோன்பு பெருநாளை முன்னிட்டு வசதி குறைந்த மக்கள் மற்றும் சிறப்பு தேவையுடைய குழந்தைகளுக்கு நோன்பு பெருநாள் அன்பளிப்புகளும் உணவுப் பொருட்களும் வழங்கியது. இந்த நிகழ்ச்சி நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெற்றது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த கெபிமா இயக்கத்தின் தோற்றுநர் ஜனாப் முகமது பின் காதிர் அலி,
“இந்த நாட்டில் வாழும் மக்கள் பெருநாள் காலங்களில் மகிழ்ச்சியுடனும் ஒற்றுமையுடனும் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கெபிமா கடந்த 27 ஆண்டுகளாக இந்த உதவி பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது,” என்றார்.
மேலும் அவர் கூறுகையில்,
சமீபகாலமாக நடைபெற்று வரும் சில சம்பவங்கள் மிகவும் வருத்தத்தை அளிக்கின்றன என்றும், மலேசியாவின் அடையாளம் என்பது பல்லின மக்களின் சமயத்தையும் கலாச்சாரத்தையும் மதித்து ஒற்றுமையுடன் வாழும் நாடு என்பதுதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இந்த ஒற்றுமையை பாதுகாக்க நம் முன்னோர்கள் செய்த தியாகங்களும் முயற்சிகளும் சில மதவெறி எண்ணம் கொண்டவர்களால் ஒரு நொடியில் சிதைந்து விடக்கூடாது. இத்தகைய செயல்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நாட்டின் அடையாளமும் அமைதியும் பாதிக்கப்படும்,” என்று அவர் கவலை தெரிவித்தார்.
அதே நேரத்தில், இஸ்ரேல் – அமெரிக்கா – ஈரான் மோதலால் உலக நாடுகள் பொருளாதார சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சிக்கன நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களை அவர் பாராட்டினார்.
அரசு அதிகாரிகளின் வெளிநாட்டு பயணங்களை ரத்து செய்தது, நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்ச்சிகளை நிறுத்தியது, மேலும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு இருப்புகளை சரியாக பராமரித்து வருவது போன்ற நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் சுமார் 500 பொதுமக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் டத்தோ வீர நைனா முகமாட் பின் சுல்தான் அப்துல் காதிர், முகமாட் பின் அப்துல் காதிர், டத்தோ ஹாஜி ஹிஷாமுடீன், டான் ஸ்ரீ உபையத்துல்லா, டத்தோ ஹாஜி டாக்டர் சையட் இப்ராஹிம், டத்தோ சேக் ஜமீல், அலி சாஜாஹான் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், கெபிமா தலைவர் முகமட் இப்ராஹிம் தலைமையில் சங்கம் தொடர்ந்து சமூக நல சேவைகளை சிறப்பாக செய்து வருவதாகவும் நிகழ்ச்சியில் குறிப்பிடப்பட்டது.
