கோலாலம்பூரில் பரபரப்பு – சமூக வலைதள வீடியோக்கள் வைரல்

கோலாலம்பூரின் பல்வேறு பகுதிகளில் பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நபர் ஒருவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவி, பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் விரைவான நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது குறித்து டாங் வாங்கி மாவட்ட காவல்துறை தலைவர் அசிஸ்டென்ட் கமிஷனர் சசாலீ அடாம் தெரிவித்ததாவது,
சந்தேக நபர் கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி, ஜாலான் சுங்கை பெசி பகுதியில் உள்ள ஒரு வங்கியின் முன்பாக கைது செய்யப்பட்டார்.
அந்த நபர் மீது இதுவரை ஆறு புகார்கள் பதிவாகியுள்ளதாகவும், குறிப்பாக ஜாலான் புடு பகுதியில் போக்குவரத்து சிக்னல் அருகே மோட்டார் சைக்கிளில் காத்திருந்த பெண்ணிடம் அவர் அநாகரிகமாக நடந்துகொண்டது விசாரணையில் தெரியவந்ததாகவும் கூறினார்.
மேலும், அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், அவர் ஜாலான் டூட்டாவில் உள்ள நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
முன்னதாக, தனியாகச் செல்லும் பெண்களை குறிவைத்து இந்நபர் இழிவான செயல்களில் ஈடுபடுவதாக சமூக வலைதளங்களில் எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டிருந்தன.
தற்போது, சந்தேக நபர் காவல்துறையினர் காவலில் வைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உறுதிபட தெரிவித்துள்ளது.
