
மித்ராவின் ‘உயர்வு மடானி’ எனப்படும் புதிய வணிகத் தொடக்க ஊக்குவிப்பு மானிய முன்னெடுப்பானது, இந்திய சமூகத்தின் தொழில்முனைவோர் சூழலை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக என கருதப்படுகிறது.
மைக்கியின் தலைவர் டத்தோஸ்ரீ என். கோபாலகிருஷ்ணன் இதனை கூறினார்.
மித்ரா கீழ் கொண்டுவரப்பட்டுள்ள இப்புதிய முன்னெடுப்பானது, ஆரம்பக்கட்ட மூலதனம், தொழில்நுட்ப ஆதரவு, வணிக வலையமைப்புகளுக்கான அணுகல் மற்றும் தொழில்துறை வழிகாட்டிகளை வழங்குகிறது.
இந்நாட்டு இந்தியர்களின் சமூக-பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஏற்ப, பி40, எம்40 பிரிவைச் சேர்ந்த இந்திய தொழில்முனைவோருக்குக் கட்டம் கட்டமாக அதிகப்பட்சம் 50,000 ரிங்கிட் மானிய உதவியை வழங்கும் ‘உயர்வு மடானி’ திட்டத்தின் அமலாக்கத்தை மைக்கி வரவேற்கிறது.
பி40, எம்40 பிரிவைச் சேர்ந்த தகுதியுடைய வணிக உரிமையாளர்களுக்கு இந்த ‘உயர்வு மடானி’ மானியம் சென்றடைவதையும், அவர்கள் இதன் மூலம் உண்மையான பலன்களைப் பெறுவதையும் உறுதி செய்ய மைக்கி உதவும் என்று டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் கூறினார்.
முன்னதாக மித்ரா கீழ் 6 புதிய முன்னெடுப்புகளை அமல்படுத்துவதன் மூலம் இந்திய சமூகத்தை மேம்படுத்த, மத்திய அரசு 65.6 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்துள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கடந்த வெள்ளிக்கிழமையன்று தெரிவித்திருந்தார்.
‘உயர்வு மடானி’ உள்ளிட்ட இந்த முன்னெடுப்புகள், நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதாரத் தரத்தை உயர்த்துவதற்காக கல்வி, தொழில்முனைவோர், சமூக மேம்பாடு, சுகாதாரம் மற்றும் சமூக உதவி ஆகிய அம்சங்களில் கவனம் செலுத்துகின்றன என அவர் கூறினார். – Nambikkai



