
வரவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில், தேசிய முன்னணி (Barisan Nasional) சார்பில் இரண்டு இந்திய வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக அதன் துணைத் தலைவரான டத்தோஸ்ரீ முகமது ஹசான் அறிவித்துள்ளார்.
வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலத் தேர்தலை முன்னிட்டு, தேசிய முன்னணி வேட்பாளர்கள் பட்டியல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
20,000-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட நிகழ்வில், தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி தலைமையில் வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
நெகிரி செம்பிலானின் 25 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேசிய முன்னணி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இதில் மலேசிய இந்திய காங்கிரஸ் (மஇகா) சார்பில் இரண்டு இந்திய வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிரம்பான் ஜெயா தொகுதியில் தினாளன் ராஜகோபால், ஸ்ரீ தஞ்சோங் தொகுதியில் அச்சுதன் ஆகியோர் தேசிய முன்னணி வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர்.
இரு இந்திய வேட்பாளர்களின் அறிவிப்பும், ஆதரவாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியதுடன், மாநிலத் தேர்தலில் இந்திய சமூகத்தின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அனைத்து முக்கிய அரசியல் கூட்டணிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.



