30.1 C
Kuala Lumpur
Wednesday, July 15, 2026

Vetri

மக்களின் நம்பிக்கையே கெஅடிலானின் பலம்; ஜொகூர் தேர்தல் முடிவை ஏற்று சீர்திருத்தங்களை முன்னெடுப்போம் – டாக்டர் குணராஜ்!

🔥 Views : 4,040
👁 Reading Now : 48

கெஅடிலான் கட்சியின் போராட்டம் எப்போதும் மக்களின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது என்றும், ஜொகூர் மாநிலத் தேர்தல் முடிவை திறந்த மனதுடன் ஏற்றுக்கொண்டு கட்சியை மேலும் வலுப்படுத்தும் சீர்திருத்தங்களை முன்னெடுக்கப் போவதாக பிகேஆர் மத்திய தலைமைக் குழு உறுப்பினரும், செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்தின் ஒரு பகுதியாகும் என்றும், மக்கள் அளிக்கும் தீர்ப்பை முழு பொறுப்புடனும் மரியாதையுடனும் ஏற்றுக்கொள்வதே கட்சியின் நிலைப்பாடு என்றும் கூறினார்.

“கெஅடிலான் உருவான நாள் முதல் மக்களின் நம்பிக்கையையே தனது மிகப்பெரிய பலமாகக் கொண்டு பயணித்து வருகிறது. மக்கள் ஒரு முடிவை எடுத்தால், அதை நாம் மதித்து திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

ஜொகூர் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்ட அவர், இந்தத் தேர்தல் முடிவை கட்சியின் செயல்பாடுகளை மறுபரிசீலனை செய்து, மக்கள் மத்தியில் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்துவோம் என்றார்.

“இது எங்களின் போராட்டத்தின் முடிவல்ல. மாறாக, அடிமட்டக் கட்சி அமைப்புகளை வலுப்படுத்தவும், மக்களின் தேவைகளை மேலும் நெருக்கமாகப் புரிந்துகொள்ளவும், தகவல் தொடர்பு மற்றும் கொள்கை அமலாக்கத்தை மேம்படுத்தவும் கிடைத்துள்ள முக்கியமான வாய்ப்பாக இதைப் பார்க்கிறோம்,” என்று டாக்டர் குணராஜ் கூறினார்.

மேலும், இனம், மதம், மொழி பாராமல் அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் சீர்திருத்தங்கள், நல்லாட்சி, சமூக நீதி மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றை முன்னிறுத்தும் தனது கொள்கைப் பயணத்தை கெஅடிலான் தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles