
கிள்ளான்: செந்தோசா சட்டமன்றத் தொகுதியில் தூய்மை, பசுமை மற்றும் ஆரோக்கியமான வாழ்விடத்தை உருவாக்கும் நோக்கில் ‘Clean & Green DUN Sentosa 2026’ துப்புரவு மற்றும் பசுமை இயக்கம், பந்தார் செந்தோசாவில் உள்ள தாமான் மெஸ்ரா அடுக்குமாடி குடியிருப்பில் (Flat Kuning) சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில், செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும் பிகேஆர் மத்திய தலைமைக் குழு உறுப்பினருமான டாக்டர் குணராஜ் ஜார்ஜ், கிள்ளான் அரச மாநகர மன்ற உறுப்பினர் திரு நியானேஸ்வரன் சுப்ரமணியம், பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள், குடியிருப்போர் சங்கங்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து பங்கேற்றார்.
இந்தத் திட்டம், கிள்ளான் அரச மாநகர மன்றம் (MBDK), கிள்ளான் மாவட்ட சுகாதார அலுவலகம் (PKD Klang), ஸ்ரீ அந்தாலாஸ் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, KDEB Waste Management, JMB, குடியிருப்போர் சங்கம், தாமான் மெஸ்ரா சுராவ், கோத்தா ராஜா நாடாளுமன்ற அலுவலகம் மற்றும் பல்வேறு அரசு, தனியார் அமைப்புகளின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வில் உரையாற்றிய டாக்டர் குணராஜ், குடியிருப்போர் வெளிப்படுத்திய ஒற்றுமை உணர்வும் தன்னார்வ பங்களிப்பும் மிகவும் பாராட்டத்தக்கது என்று கூறினார்.
“ஒரு சமூகத்தின் உண்மையான பலம் என்பது, அனைவரும் ஒன்றிணைந்து தங்களது வாழ்விடத்தின் தூய்மை, அழகு மற்றும் நலனைப் பாதுகாக்கும் மனப்பான்மையில்தான் உள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களது நேரத்தையும் உழைப்பையும் அர்ப்பணித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த அவர், கூட்டுப்பணியின் கலாச்சாரம் தொடர்ந்து வலுப்பெற்று, செந்தோசா தொகுதியை மேலும் தூய்மையான, பசுமையான, ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான வாழ்விடமாக மாற்ற அனைவரும் தொடர்ந்து இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
“ஒன்றிணைந்து செயல்படுவோம்; தூய்மையான, பசுமையான மற்றும் நிலையான செந்தோசாவை உருவாக்குவோம்,” என்று டாக்டர் குணராஜ் ஜார்ஜ் வலியுறுத்தினார்.



