
ஜொகூர் பாரு: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் விடுவிக்கப்பட்டால் தாம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறியிருந்த வீடமைப்பு மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ங்கா கோர் மிங், தனது கருத்து குறித்து நியாயமான விளக்கத்தை வெளியிட வேண்டும் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி வலியுறுத்தியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது அனைத்து கூட்டணிக் கட்சிகளும் ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் இணைந்து செயல்பட்டு வருவதால், இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளை பொதுவெளியில் வெளியிட வேண்டிய அவசியமில்லை என்றார்.
“ஒவ்வொரு வாரமும் அமைச்சரவைக் கூட்டத்தில் நாம் அனைவரும் சந்திக்கிறோம். எனவே, இதுபோன்ற விவகாரங்களில் வெளியிடப்படும் அறிக்கைகள் நியாயமானதாகவும் பொறுப்புணர்வுடனும் இருக்க வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியாக இருந்திருந்தால் இத்தகைய கருத்துகள் அரசியல் அறிக்கையாகக் கருதப்பட்டிருக்கலாம். ஆனால் தற்போது அனைவரும் ஒரே அரசாங்கத்தில் இணைந்து பணியாற்றும் நிலையில், தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் ஜாஹித் ஹமிடி கூறினார்.



