
சிரம்பான்: வரவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில், ஜனநாயக செயல் கட்சி (DAP) மூன்று புதிய வேட்பாளர்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் அறிவித்துள்ளார்.
இந்தத் தேர்தலில் டிஏபி மொத்தம் 11 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் மூன்று தொகுதிகளில் புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், மீதமுள்ள எட்டு தொகுதிகளில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களே மீண்டும் களமிறக்கப்படுகின்றனர்.
புதிய வேட்பாளர்களாக மம்பாவ் தொகுதியில் லீ காய் யெட், சிரம்பான் ஜெயா தொகுதியில் எஸ். முகுந்தன், மற்றும் தெமியாங் தொகுதியில் ஹொ வெங் வாஹ் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.
அதேவேளையில், தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களான அருள்குமார் ஜம்புலிங்கம் (நீலாய்) மற்றும் வீரப்பன் (ரெப்பா) உள்ளிட்ட எட்டு பேர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
கட்சியின் வேட்பாளர் பட்டியலை அறிவித்த அந்தோணி லோக், அனுபவமும் புதிய தலைமுறையின் பங்களிப்பும் இணைந்த அணியை மக்கள் முன் நிறுத்துவதே டிஏபியின் நோக்கம் என்று தெரிவித்தார்.
கடந்த 2023 நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில், பக்கத்தான் ஹரப்பான் 17 இடங்களிலும், தேசிய முன்னணி 14 இடங்களிலும், பெரிக்காத்தான் நேஷனல் 5 இடங்களிலும் வெற்றி பெற்று, பக்கத்தான் ஹரப்பான் மற்றும் தேசிய முன்னணி இணைந்து மாநில அரசாங்கத்தை அமைத்தது குறிப்பிடத்தக்கது.



