
ஜொகூர் பாரு: ஜொகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் (JS-SEZ) பெருந்திட்ட வரைவு விரைவில் இறுதி செய்யப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த பெருந்திட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அவர் கூறினார்.
சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினத்துடன் நடைபெற்ற சந்திப்பின் போது, ஜொகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் முன்னேற்றம் முக்கிய விவாதப் பொருளாக இடம்பெற்றதாக பிரதமர் தெரிவித்தார்.
“இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இரு நாடுகளும் வரவேற்றுள்ளன. நிலுவையில் உள்ள முக்கிய அம்சங்களை விரைவாகத் தீர்ப்பதற்கான முயற்சிகளிலும் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது,” என்று அன்வார் கூறினார்.
மேலும், மலேசியா–சிங்கப்பூர் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது, பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கும் பொதுவான நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துப் பரிமாற்றம் செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
ஜொகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் முழுமையாக நடைமுறைக்கு வந்தால், முதலீடுகளை அதிகரிப்பதுடன், வேலைவாய்ப்புகள், தொழில் வளர்ச்சி மற்றும் எல்லை தாண்டிய பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.



