
மலேசியாவில் இஸ்ரேல் நாட்டினர் எவரேனும் இருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியாக தெரிவித்துள்ளார்.
ஜொகூரில் உள்ள Forest City பகுதியில் செயல்படும் Network School திட்டத்தில் இஸ்ரேல் நாட்டவர்கள் பங்கேற்றதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து கருத்து தெரிவித்த அவர், இஸ்ரேலை அங்கீகரிக்காத தெளிவான வெளியுறவுக் கொள்கையை மலேசியா கடைப்பிடித்து வருவதால், இந்த விவகாரத்தில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை என்று வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் தொடர்பாக நாட்டின் அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், சம்பந்தப்பட்டவர்கள் இரட்டை குடியுரிமை அல்லது மாற்று நாட்டின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி மலேசியாவுக்குள் நுழைந்திருக்கக்கூடும் என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அன்வார் கூறினார்.
இதுகுறித்து கல்வி அமைச்சும் உயர்கல்வி அமைச்சும் விரைவில் விரிவான விளக்கத்தை வெளியிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
மலேசியாவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான நிலைப்பாட்டில் அரசு உறுதியாக இருப்பதாகவும், நாட்டின் சட்டங்களை மீறும் எந்த நடவடிக்கைக்கும் இடமளிக்கப்படாது என்றும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் மீண்டும் வலியுறுத்தினார்.



