
விரைவில் நடைபெறவுள்ள 16-ஆவது ஜோகூர் மாநிலத் தேர்தலில், மலேசிய இந்திய காங்கிரஸ் (ம.இ.கா) வழக்கம் போலவே நான்கு தொகுதிகளில் போட்டியிடும் என நம்பகமான கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், தேசிய முன்னணி (BN) கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீட்டை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அம்னோ மற்றும் ம.இ.கா இடையே ஒரு தொகுதி பரிமாற்றம் இடம்பெறக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, தற்போது ம.இ.கா வசம் உள்ள தெங்காரோ (Tenggaroh) தொகுதி அம்னோவுக்கு ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதற்கு மாற்றாக, இந்திய வாக்காளர்கள் அதிகம் உள்ள மற்றொரு சாதகமான தொகுதி ம.இ.கா-வுக்கு வழங்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்தத் தொகுதி எது என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
அதேவேளையில், கடந்த மாநிலத் தேர்தலில் ம.இ.கா போட்டியிட்ட கெமளா (Kemelah), கஹாங் (Kahang) மற்றும் புக்கிட் பத்து (Bukit Batu) ஆகிய தொகுதிகள் கட்சியின் கட்டுப்பாட்டிலேயே நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெங்காரோ தொகுதி தற்போது ஜோகூர் ம.இ.கா தலைவரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான ரவின் குமார் கிருஷ்ணசாமி பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதியாகும்.
கடந்த மே 17-ஆம் தேதி நடைபெற்ற ஜோகூர் தேசிய முன்னணி தலைவர்கள் சந்திப்பில், ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் மற்றும் ஜோகூர் BN தலைவர் டத்தோ ஓன் ஹபீஸ் காசி முன்னிலையில் இந்த விவகாரம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 2022 மாநிலத் தேர்தலில் கெமளா, தெங்காரோ மற்றும் கஹாங் தொகுதிகளில் ம.இ.கா வெற்றி பெற்றதுடன், புக்கிட் பத்து தொகுதியில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. ஜூன் 1-ஆம் தேதி ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு தேர்தல் அரசியல் சூடுபிடித்துள்ளது.



