
தீபகற்ப மலேசியாவில் ரோன்97 பெட்ரோல், மானியமில்லாத ரோன்95 பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. புதிய விலைகள் ஜூன் 4 முதல் ஜூன் 10 வரை அமலில் இருக்கும் என அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ரோன்97 பெட்ரோலின் விலை லிட்டருக்கு 30 சென் குறைக்கப்பட்டு, முன்பு இருந்த RM4.65 இலிருந்து RM4.35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, மானியமில்லாத ரோன்95 பெட்ரோலின் விலை லிட்டருக்கு 20 சென் குறைந்து, RM3.92 இலிருந்து RM3.72 ஆக சரிந்துள்ளது.
தீபகற்ப மலேசியாவில் டீசலின் சில்லறை விலையும் குறைக்கப்பட்டுள்ளது. முன்பு லிட்டருக்கு RM4.87 ஆக இருந்த டீசல் விலை, 20 சென் குறைக்கப்பட்டு RM4.67 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை சராசரியாகக் குறைந்ததன் விளைவாக, தானியங்கி விலை நிர்ணய முறை (Automatic Pricing Mechanism – APM) அடிப்படையில் இந்த புதிய சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு விளக்கியுள்ளது.



