
கார் ஓட்டிக்கொண்டிருந்தபோது ஆபத்தான முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படும் காதல் ஜோடி ஒன்றை சாலைப் போக்குவரத்துத் துறையான (JPJ) அதிகாரிகள் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் காணொளி ஒன்றில், ஒரு பெண் சீட் பெல்ட் அணியாமல், ஓட்டுநரை நோக்கி அமர்ந்தபடி காரின் டாஷ்போர்டில் சாய்ந்திருப்பது பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இது சாலைப் பாதுகாப்பை மீறும் மிகவும் ஆபத்தான செயலாகும் என JPJ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாகனம் இயக்கப்படும் நேரத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் ஓட்டுநரின் கவனத்தைச் சிதறடித்து, கடுமையான விபத்துகளுக்கு வழிவகுக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
JPJ அமலாக்கப் பிரிவு மூத்த இயக்குநர் டத்தோ முகம்மட் கிஃப்லி மா ஹசான் கூறுகையில், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். காணொளியில் இடம்பெற்ற வாகனத்தின் விவரங்கள் மற்றும் அதில் இருந்த நபர்களின் அடையாளங்களை கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
போக்குவரத்து விதிகளை மீறியதற்காக சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் பெண் பயணிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அபராதம் விதிக்கப்படும் என்றும் JPJ தெரிவித்துள்ளது. சாலைப் பாதுகாப்பை அலட்சியப்படுத்தும் இத்தகைய செயல்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.



