
மலேசிய மண்ணில் 60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாரம்பரியப் பரதநாட்டியக் கலையைத் தலைமுறைகள் கடந்து வளர்த்து வரும் தஞ்சை கமலா இந்திரா நாட்டியப்பள்ளியின் ‘டயமண்ட் ஜூப்ளி காலா நைட்’ வைர விழா விருந்து நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை கோலாலம்பூரில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது!
நட்டுவ திலகம் திருமதி இந்திரா மாணிக்கம் அவர்களின் தலைமையில், கலைப் பாதுகாப்புப் பயணத்தை விவரிக்கும் வகையில் இந்த விழா அமைந்தது. இதன் முக்கிய அங்கமாக, நாட்டியப்பள்ளியின் முன்னாள் மாணவிகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் சொந்தமாக நடனப்பள்ளி நடத்தி வரும் சாதனைப் பெண்களுக்கு மேடையில் சிறப்பு அங்கீகாரமும் கௌரவிப்பும் வழங்கப்பட்டன.

மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் நிகழ்வை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். துணை அமைச்சர் ஆர். யுனேஸ்வரன், மலேசிய இந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் டத்தோ அ. வைத்திலிங்கம், உலு சிலாங்கூர் மாவட்ட நகராண்மைக்கழக உறுப்பினர் பி. புவனேஸ்வரன் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் முன்னிலையில், இப்பள்ளியின் 60 ஆண்டுகால கலைப் பயணத்தை விவரிக்கும் சிறப்பு நூல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது!
தொடர்ந்து நடைபெற்ற மாணவர்களின் கண்ணைக் கவரும் பரதநாட்டியக் கலை ஆகிய நிகழ்ச்சிகளுடனும், சுவையான விருந்துபசாரத்துடனும் இந்த வைர விழா இனிதே நிறைவுற்றது!



