
நெகிரி செம்பிலான் மாநில தமிழ் கிறிஸ்தவ பாதிரியார்கள் அமைப்பின் சார்பில் சிறப்பு ஒன்றுகூடல் நிகழ்வு இன்று ரோயல் சுங்கை ஊஜோங் கிளப்பில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரபல தொழிலதிபரும், ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவருமான ஓம்ஸ் தியாகராஜன், நெகிரி செம்பிலான் மாநில அரசின் செயல்பாடுகளைப் பாராட்டினார்.அவர் பேசுகையில், “தற்போதைய நெகிரி செம்பிலான் அரசு அனைத்து இன மக்களையும் சமமாக அரவணைத்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அரசாங்கத்திற்கு எனது முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்குவேன்,” என்று தெரிவித்தார்.மேலும், நிகழ்வில் பங்கேற்ற அனைத்து தமிழ் கிறிஸ்தவ பாதிரியார்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்த அவர், தமிழ் கிறிஸ்தவ பாதிரியார்கள் அமைப்பின் வளர்ச்சிக்கும், அதன் சமூகப் பணிகளுக்கும் தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் தொடர்ந்து வழங்குவதாக உறுதியளித்தார்.இந்தச் சந்திப்பில் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜார்ஜ், பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன், முன்னாள் ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற உறுப்பினர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அத்துடன், நெகிரி செம்பிலான் மாநிலத்தைச் சேர்ந்த 63 தமிழ் கிறிஸ்தவ தேவாலயங்களின் பாதிரியார்களும், தேவாலய ஊழியர்களும் இந்நிகழ்வில் பங்கேற்று, சமூகத்தின் எதிர்கால வளர்ச்சி, ஒற்றுமை மற்றும் நலன் தொடர்பான பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.



