
நெகிரி செம்பிலானில் வாழும் தமிழ் கிறிஸ்தவ சமூகத்தின் பல்வேறு கோரிக்கைகள் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
நெகிரி செம்பிலான் சிரம்பான் தமிழ் பாதிரியார்கள் சங்கத்துடன் இன்று நடைபெற்ற சிறப்பு சந்திப்பில், சங்கத்தின் தலைவர் ரிச்சர்ட் டாக்டர் அகஸ்டின் தலைமையில் மாநிலம் முழுவதும் உள்ள 63 தனியார் தேவாலயங்களின் பிரதிநிதிகளும், தமிழ் கிறிஸ்தவ சமூக உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இந்தச் சந்திப்பில் தமிழ் கிறிஸ்தவ சமூகத்தின் தேவைகள், சமூக முன்னேற்றம், கல்வி மற்றும் வழிபாட்டு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
சந்திப்பின்போது, மாநிலத்தில் வாழும் கிறிஸ்தவ மக்கள் பயன்படுத்தக்கூடிய சொந்த சமூக மண்டபம் இல்லாததால், 3 ஏக்கர் நிலம் ஒதுக்கி மண்டபம் அமைக்க வேண்டும் என்றும், மாநிலம் முழுவதும் உள்ள 63 தேவாலயங்களைப் புதுப்பித்து சீரமைப்பதற்காக அரசாங்கம் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன், தமிழ் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித் திட்டங்கள் மற்றும் கல்வி சார்ந்த ஆதரவுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்த அனைத்து கோரிக்கைகளும் அடங்கிய மகஜர் தயாரிக்கப்பட்டு, இன்றைய சந்திப்பில் கலந்து கொண்ட பிரதமரின் அரசியல் செயலாளர் மிங் தாய் அவர்களிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த டாக்டர் குணராஜ், “தமிழ் கிறிஸ்தவ சமூகத்தின் இந்த கோரிக்கைகள் அனைத்தும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. சமூகத்தின் நலனுக்காக தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
இந்தச் சந்திப்பில் ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவர் ஓம்ஸ் தியாகராஜன், பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன், முன்னாள் ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற உறுப்பினர் ரவி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.



