25.2 C
Kuala Lumpur
Friday, July 24, 2026

Vetri

இந்திய சமூக முன்னேற்றத்திற்கு கல்வி, நலன், வேலைவாய்ப்பு அவசியம் – பிரதமர் அன்வார்!

🔥 Views : 2,347
👁 Reading Now : 41

இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்கான முக்கிய அடித்தளங்களாக தரமான கல்வி, சமூக நலன் மற்றும் வேலைவாய்ப்புகள் அமைய வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய சமூகத் தலைவர்களுடன் இன்று நடைபெற்ற சந்திப்பில், இந்திய சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகவும், அந்தச் சந்திப்பில் கல்வி, திறன் மேம்பாடு, விரிவான நலத்திட்டங்கள் மற்றும் தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டதாகவும் அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும், மலேசிய இந்திய மாற்றப் பிரிவு (MITRA) மற்றும் அதனுடன் இணைந்துள்ள அனைத்து அரசுத் துறைகளும் அடிமட்ட மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் உண்மையான தேவைகளை அறிந்து செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தினார்.

“மித்ராவும் தொடர்புடைய அனைத்து அமைப்புகளும் தொடர்ந்து களத்தில் இறங்கி சமூகத்தை அணுக வேண்டும். மக்களின் உண்மையான தேவைகளை அடையாளம் கண்டு, செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டமும் உண்மையில் உதவி தேவைப்படுபவர்களைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

தேசிய வளர்ச்சிப் பயணத்தில் எந்த ஒரு சமூகமும் பின்தங்காமல் இருப்பதை உறுதிப்படுத்த, கருணை, பொறுப்புணர்வு மற்றும் நல்லாட்சியை அடிப்படையாகக் கொண்ட நிர்வாக அணுகுமுறை மிகவும் முக்கியமானது என்றும் அவர் கூறினார்.

இந்த அணுகுமுறையின் மூலம், அனைத்து மலேசியர்களுக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட்டு, சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles