25.2 C
Kuala Lumpur
Friday, July 24, 2026

Vetri

மரக் கட்டமைப்பு ரயில் பாதையில் விழுந்ததால் KTM, ETS சேவைகள் கடுமையாக பாதிப்பு

🔥 Views : 828
👁 Reading Now : 33

நெகிரி செம்பிலானின் பாத்தாங் பெனார் அருகே கட்டுமானப் பணிக்காக அமைக்கப்பட்டிருந்த மரக் கட்டமைப்பு ரயில் பாதையில் விழுந்ததைத் தொடர்ந்து, KTM கொம்யூட்டர் மற்றும் ETS ரயில் சேவைகள் இன்று கடுமையாக பாதிக்கப்பட்டன.

கெரெத்தாபி தனா மெலாயு பெர்ஹாட் (KTMB) வெளியிட்ட அறிக்கையில், பாத்தாங் பெனார் மற்றும் லாபு ரயில் நிலையங்களுக்கு இடையிலுள்ள மேல்நிலை மின்கம்பி (Overhead Line) அமைப்பின் மீது மரக் கட்டமைப்பு மோதி சேதமடைந்ததால், மின்விநியோகம் தடைபட்டு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, புலாவ் செப்பாங் – கே.எல். சென்ட்ரல் KTM கொம்யூட்டர் சேவை சிரம்பான் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. அதேவேளை, கே.எல். சென்ட்ரல் மற்றும் பத்து கேவ்ஸ் நோக்கிச் செல்லும் சேவைகள் பாங்கி நிலையத்திலிருந்து மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பாங்கி – சிரம்பான் இடையிலான ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஷட்டில் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. மேலும், பயணத்தைத் தொடர விரும்பாத ETS பயணிகளுக்கு முழு கட்டணமும் திருப்பி வழங்கப்படும் என KTMB அறிவித்துள்ளது.

பழுதுபார்ப்பு பணிகள் இன்று இரவு 10 மணிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பக்கட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட கட்டுமான ஒப்பந்ததாரர் தேவையான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்பதுடன், பணிகள் நடைபெறும் நேரம் குறித்து KTMB-க்கு முன்கூட்டியே அறிவிக்காததும் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு KTMB வருத்தம் தெரிவித்ததுடன், பழுதுபார்ப்பு பணிகளை விரைவாக முடித்து வழக்கமான ரயில் சேவையை மீண்டும் தொடங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles