
செய்தி / படங்கள் : எம்.முருகன்
கராத்தே துறையில் அரை நூற்றாண்டு சாதனையை நிறைவு செய்யும் வகையில், தோனி பொன்னையா கராத்தே கப் போட்டியின் 50ஆம் ஆண்டு விழா எதிர்வரும் ஜூலை 18 மற்றும் 19ஆம் திகதிகளில் கோயம்புத்தூரில் மிகப் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
இந்த சிறப்பு விழாவில் மலேசியாவில் புகழ்பெற்ற கராத்தே பயிற்சியாளரும், பல்வேறு சர்வதேச போட்டிகளில் மாணவர்களை உருவாக்கியவருமான கராத்தே மாஸ்டர் பொன்னையா சிறப்பு வருகை தந்து விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்க உள்ளார். அவரது வருகை கராத்தே ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு வயது பிரிவுகளைச் சேர்ந்த கராத்தே வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தவுள்ளனர். கராத்தே கலை வளர்ச்சிக்கும் இளம் தலைமுறையினரிடையே ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கும் இந்த விழா முக்கிய பங்காற்றும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கோயம்புத்தூரைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், விளையாட்டு அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூகத் தலைவர்கள் மற்றும் கராத்தே துறையைச் சேர்ந்த பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். கராத்தே கலைக்காக 50 ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய தோனி பொன்னையாவின் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இந்த விழா அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



