
டத்தோஸ்ரீ ஹம்ஸா ஜைனுடின் மீண்டும் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தேசியக் கூட்டணியின் தலைமைக் கொறடாவான டத்தோஸ்ரீ தக்கியூடின் ஹசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் டான்ஸ்ரீ ஜொஹாரி அப்துலுக்கு அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தேசியக் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் 61 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹம்ஸா ஜைனுடினை புதிய எதிர்க்கட்சித் தலைவராக ஒருமனதாக ஆதரித்துள்ளதாக தக்கியூடின் தெரிவித்தார். அதன்படி, அவரின் நியமனம் தொடர்பான தகவல் சபாநாயகருக்கு முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கெமாமான் நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோஸ்ரீ அஹ்மத் சம்சுரி மொக்தார் எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எதிர்க்கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் மற்றும் நாடாளுமன்றப் பொறுப்புகளை முன்னெடுக்கும் வகையில் ஹம்ஸா மீண்டும் அந்தப் பொறுப்பை ஏற்கிறார்.
மேலும், கடந்த ஜூன் 10ஆம் தேதி இந்த விவரம் மக்களவை சபாநாயகர் ஜொஹாரி அப்துலுக்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டதாக தக்கியூடின் ஹசன் குறிப்பிட்டார். இந்த நியமனம் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்றத் தலைமையில் புதிய கட்டத்தை உருவாக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.



