
தேசியக் கூட்டணிக்குள் நிலவும் அரசியல் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், பெர்சத்து தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் பாஸ் தலைமையகத்தில் நடைபெற்ற முக்கிய கூட்டத்தில் கலந்து கொண்டது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் மற்றும் அதிகாரச் சமநிலை தொடர்பான விவாதங்கள் வலுப்பெற்று வரும் சூழலில், மொஹைதின் நேரடியாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்றது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
டான்ஸ்ரீ மொஹைதின் இரவு சுமார் 8.30 மணியளவில் பாஸ் அலுவலகத்திற்கு வந்தடைந்தார். அவருடன் பெர்சத்து உதவித் தலைவர் அஹ்மத் பைசல் அசுமு, பெர்சத்து மகளிர் தலைவர் நோலீ அஷிலின் முகமது ரட்ஸி மற்றும் இளைஞர் தலைவர் முஹம்மது ஹில்மன் இத்மான் ஆகியோரும் உடன் இருந்தனர்.
தேசியக் கூட்டணி தலைவர் அஹ்மத் சம்சூரி மொக்தாரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
கூட்டணிக்குள் நிலவும் அழுத்தமான அரசியல் சூழ்நிலையில் நடைபெற்ற இந்த சந்திப்பு, தேசியக் கூட்டணியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து புதிய ஊகங்களை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, பெர்சத்து மற்றும் பாஸ் இடையிலான உறவு, தலைமைத்துவ நிலைப்பாடு மற்றும் எதிர்கால கூட்டணி திசை குறித்து அரசியல் பார்வையாளர்கள் தீவிரமாக கவனித்து வருகின்றனர்.
இந்தக் கூட்டம் சாதாரண ஆலோசனைக் கூட்டமா அல்லது கூட்டணிக்குள் உருவாகியுள்ள பதற்றத்தை சமாளிக்கும் முயற்சியா என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் விவாதம் எழுந்துள்ளது.



