
மானியமில்லா ரோன் 95, ரோன் 97 பெட்ரோல் மற்றும் தீபகற்ப மலேசியாவில் விற்பனை செய்யப்படும் டீசலின் சில்லறை விலைகள், ஜூன் 25 முதல் ஜூன் 30 வரையிலான காலகட்டத்திற்கு மீண்டும் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
புதிய விலைப்பட்டியலின்படி, மானியமில்லா ரோன் 95 பெட்ரோலின் சில்லறை விலை ஒரு லிட்டருக்கு 25 சென் குறைந்து 3.47 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், ரோன் 97 பெட்ரோலின் விலையும் 25 சென் குறைந்து ஒரு லிட்டருக்கு 4.10 ரிங்கிட்டாக விற்பனை செய்யப்படும்.
தீபகற்ப மலேசியாவில் டீசலின் சில்லறை விலையும் ஒரு லிட்டருக்கு 30 சென் குறைக்கப்பட்டு 4.07 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் குறைந்ததுடன், மேற்கு ஆசியாவில் நிலவி வந்த பதற்றமான சூழ்நிலையில் ஏற்பட்ட சாதகமான முன்னேற்றங்களே இந்த விலைக் குறைப்புக்கு முக்கிய காரணமாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கிழக்கு மலேசியாவில் புடி மடானி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானிய ரோன் 95 மற்றும் டீசலின் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அவை முறையே ஒரு லிட்டருக்கு 1.99 ரிங்கிட் மற்றும் 2.15 ரிங்கிட் என்ற விலையிலேயே தொடரும் என்று அமைச்சு அறிவித்துள்ளது.



