26.3 C
Kuala Lumpur
Saturday, September 26, 2026

Vetri

🚔 வாசனை திரவிய முதலீட்டு மோசடி கும்பல் சிக்கியது; 6 பேர் கைது!

🔥 Views : 1,992
👁 Reading Now : 30

வாசனை திரவியங்களில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என பொதுமக்களை ஏமாற்றி வந்த முதலீட்டு மோசடி கும்பலை போலீசார் முறியடித்துள்ளனர்.

கோலாலம்பூர் எக்கோ சிட்டியில் உள்ள ஒரு அலுவலகத்தில் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 23 முதல் 47 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் என மொத்தம் ஆறு பேர் கைது செய்யப்பட்டதாக செந்தூல் மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் பஸ்ரி சாகோனி தெரிவித்தார்.

செந்தூல் மாவட்ட வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவும், கோலாலம்பூர் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அவர் கூறினார். ஆரம்ப விசாரணையில், கைது செய்யப்பட்ட ஒவ்வொருவரும் கும்பலின் செயல்பாடுகளில் தனித்தனி பொறுப்புகளை வகித்ததும், உள்ளூர் மக்களை இலக்காகக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

சோதனையின் போது ஆறு கைப்பேசிகள், ஒரு கணினி, ஏடிஎம் மற்றும் டெபிட் அட்டைகள், நிறுவன ஆவணங்கள் மற்றும் வாசனை திரவியப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட அனைவரும் குற்றவியல் சட்டம் பிரிவு 420-ன் கீழ் விசாரணைக்காக இரண்டு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறப்படும் முதலீட்டு திட்டங்களை மக்கள் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என்றும், தகவல் தெரிந்தவர்கள் 03-4048 2222 என்ற செந்தூல் காவல்துறை உதவி எண்ணையோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தையோ தொடர்புகொள்ளுமாறும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles