
பினாங்கின் ஜார்ஜ் டவுனில் உள்ள ஜாலான் லிந்தாங் மெர்டேக்கா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரொன்றில் 55 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் வழங்கிய தகவலின் பேரில் இன்று காலை சுமார் 9.50 மணியளவில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த நிலையில் அந்த நபரின் சடலத்தை கண்டுபிடித்தனர்.
வடகிழக்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் அப்துல் ரோசாக் முகம்மட் கூறுகையில், காலை 9.30 மணியளவில் சந்தேகத்திற்கிடமாக நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டிருந்த காரை கவனித்த துப்புரவுப் பணியாளர் ஒருவர் காவல்துறைக்கு தகவல் வழங்கியதாக தெரிவித்தார்.
விசாரணையில், உயிரிழந்தவர் புக்கிட் மெர்தாஜாமைச் சேர்ந்த 55 வயதுடையவர் என்பது தெரியவந்துள்ளது. அவர் முழுமையான உடையுடன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்ததுடன், கார் பூட்டப்படாத நிலையிலும் காணப்பட்டது. சம்பவ இடத்திலும் உடலிலும் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப பரிசோதனையில் வன்முறை அல்லது குற்றச்செயலுக்கான எந்த அறிகுறியும் கண்டறியப்படவில்லை.
மேலும், உயிரிழந்தவருக்கு நீண்டகால உடல்நலப் பிரச்சினை இருந்து அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. உடலின் நிலையை அடிப்படையாகக் கொண்டு, அவர் சுமார் நான்கு நாட்களுக்கு முன்பே உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுவதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.



