
எச்ஆர்டி கோர்ப்பில் (HRD Corp) இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பான புகார்களைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் ஆறு உயர் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்காலிகமாகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பொதுக் கணக்குக் குழு (PAC), தலைமை கணக்காய்வாளர் அறிக்கை (LKAN) மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) வெளியிட்ட அறிக்கைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில் இதனை உறுதிப்படுத்திய அமைச்சர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதன் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த விசாரணை முழுமையாக நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் நடைபெறுவதை எச்ஆர்டி கோர்ப் உறுதி செய்யும் என்றும், நிறுவனத்தின் நிதி ஒருமைப்பாடு மற்றும் நலனில் எந்தவித சமரசமும் செய்யப்பட மாட்டாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
எச்ஆர்டி கோர்ப்பின் நிதி மேலாண்மை, மெனாரா இக்லாஸ் கட்டிடத்தை கையகப்படுத்திய விவகாரம் மற்றும் பங்கு முதலீட்டு மேலாண்மை தொடர்பான பல்வேறு புகார்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. குறிப்பாக, பயிற்சி நிதியாக வசூலிக்கப்பட்ட தொகைகள் அதிக ஆபத்துள்ள முதலீடுகளில் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளும் தீவிரமாக ஆய்வு செய்யப்படுகின்றன.
இதனிடையே, நிறுவனத்தின் முதலீட்டு நிதி தொகுப்பை மறுசீரமைத்து, நிதி மேலாண்மையை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளை எச்ஆர்டி கோர்ப் மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.



