33.5 C
Kuala Lumpur
Wednesday, July 8, 2026

Vetri

பக்கத்தான் ஹரப்பானின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து இந்திய சமூகம் முன்னேற வேண்டும் – டாக்டர் குணராஜ்!

🔥 Views : 4,417
👁 Reading Now : 35

ஜொகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, இந்திய சமூகத்தினர் பழைய அரசியல் வாக்குறுதிகள் மற்றும் உணர்ச்சிவசப்பட்ட பிரச்சாரங்களில் சிக்கிக் கொள்ளாமல், பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தின் செயல்திறன் மற்றும் சாதனைகளின் அடிப்படையில் தங்களது அரசியல் முடிவை எடுக்க வேண்டும் என்று பிகேஆர் மத்திய தலைமைக் குழு உறுப்பினரும், செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் குணராஜ் வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம், “நம்பிக்கை” என்ற புதிய அத்தியாயத்தை அனைத்து இன மக்களுக்கும், குறிப்பாக இந்திய சமூகத்திற்கும் உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

பிரதமர் அன்வார் இப்ராஹிம் தனது அரசியல் பயணத்தின் தொடக்கத்திலிருந்தே இனவாத அரசியலை உடைத்து, ஒற்றுமை, நீதி மற்றும் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை அடிப்படையாகக் கொண்ட மலேசியாவை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.

“இன அரசியல் மட்டும் இன்றைய மலேசியாவின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது. கொள்கைகள், செயல்திறன் மற்றும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் அரசியலே நாட்டை முன்னேற்றும். அதனால்தான் மடானி கொள்கையை பிரதமர் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்,” என்று டாக்டர் குணராஜ் தெரிவித்தார்.

மேலும், ஜொகூர் மாநிலத் தேர்தல், வளர்ச்சி, அரசியல் நிலைத்தன்மை மற்றும் மக்கள் நலனை உறுதிப்படுத்தும் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் முக்கியமான வாய்ப்பாகும் என்றும் அவர் கூறினார்.

இந்திய சமூகம் தற்போது அரசியல் ரீதியாக முதிர்ச்சியடைந்து, வெறும் வாக்குறுதிகளை விட செயல்பாடுகள் மற்றும் மக்களுக்கு கிடைத்த நன்மைகளின் அடிப்படையில் அரசியல் கட்சிகளை மதிப்பிடத் தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“இப்போது இந்திய சமூகம் பக்கத்தான் ஹரப்பானின் செயல்திறனுடன் முன்னேற வேண்டும். நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் மற்றும் உண்மையான சாதனைகளின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டிய காலம் இது. மக்கள் தாங்களே உண்மையை மதிப்பீடு செய்ய முடியும்,” என்றார்.

மடானி அரசாங்கம் கடந்த மூன்று ஆண்டுகளில் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துதல், கல்வி மேம்பாடு, வேலைவாய்ப்புகள், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு (MITRA)-வுக்கான ஒதுக்கீடு RM100 மில்லியனிலிருந்து RM150 மில்லியனாக உயர்த்தப்பட்டிருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகும் என்றும், இந்திய தொழில்முனைவோருக்கான TEKUN Nasional நிதி RM100 மில்லியனாக அதிகரிக்கப்பட்டதையும், இந்திய மகளிர் தொழில்முனைவோருக்காக Amanah Ikhtiar Malaysia (AIM) மூலம் RM100 மில்லியன் ஒதுக்கப்பட்டதையும் அவர் நினைவுபடுத்தினார்.

மேலும், இந்தாண்டு ஜனவரியில் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக RM50 மில்லியன் ஒதுக்கீட்டை பிரதமர் அறிவித்ததையும் அவர் வரவேற்றார்.

இந்த முயற்சிகளால் இந்திய சமூகத்தைச் சேர்ந்த தொழில்முனைவோர், மாணவர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் பல்வேறு வகைகளில் பயனடைந்துள்ளதாகவும், அரசாங்கத்தின் செயல்திறனை உண்மைகள் மற்றும் சாதனைகளின் அடிப்படையில் மக்கள் மதிப்பிட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அரசியல் நிலைத்தன்மையே பொருளாதார வளர்ச்சி, முதலீடுகள் மற்றும் தரமான வேலைவாய்ப்புகளுக்கான அடித்தளம் என்றும் வலியுறுத்திய டாக்டர் குணராஜ், ஜொகூர் மாநிலத்தின் வளர்ச்சி, ஒற்றுமை மற்றும் வளமான எதிர்காலத்தை உறுதிப்படுத்த இந்திய சமூகம் பக்கத்தான் ஹரப்பானுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

“ஜொகூர் மாநிலத் தேர்தல் வெறும் அரசியல் போட்டி அல்ல. அது மாநிலத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கியமான தேர்தல். வளர்ச்சி, நிலைத்தன்மை மற்றும் நம்பிக்கையுடன் கூடிய ஜொகூரை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறுவோம்,” என்று டாக்டர் குணராஜ் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles