31.9 C
Kuala Lumpur
Thursday, July 9, 2026

Vetri

பத்துமலை முருகன் அமைந்துள்ள தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதில் பெருமை கொள்கிறேன்! சிலாங்கூர் மந்திரி பெசார் பெருமிதம்

🔥 Views : 3,950
👁 Reading Now : 42

ஜொகூர் பாரு ஜூலை 9-
ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சிலாங்கூர் மாநில மந்திரி புசாரும், கெஅடிலான் கட்சியின் தேசிய துணைத் தலைவருமான டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

கெஅடிலான் மகளிர் அணி செயலாளர் சங்கீதா ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

“இந்த நாடு அனைத்து மலேசியர்களுக்கும் சொந்தமானது. எல்லா இன மக்களும் அவரவர் சமய, கலாச்சார உரிமைகளுடன் தலைநிமிர்ந்து, சுதந்திரமாகவும் மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும்.

அதற்குத் தேவையான மனத்துணிவும் அரசியல் உறுதியும் கொண்ட பொறுப்பான அரசு நாட்டிற்கு அவசியம்.

அந்தக் கொள்கையை சிலாங்கூரில் மட்டுமன்றி நாடு முழுவதும் பக்காத்தான் ஹரப்பான் நடைமுறைப்படுத்தி வருகிறது. அதற்கு இன்றைய இந்திய கலாச்சார விழாவே சிறந்த முன்னுதாரணமாகும்,” என்றார்.

மேலும், “இன்று சில தரப்பினர் மக்களிடையே சந்தேகம், வேற்றுமை, அச்சம் ஆகியவற்றைத் தூண்டி சமூக ஒற்றுமையைச் சீர்குலைக்க முயல்கின்றனர்.

நான் அரசியலில் ஈடுபட்ட நாள் முதல் இந்தியச் சமூகத்துடன் நெருக்கமான உறவைப் பேணி வருகிறேன்.

அதிக இந்திய வாக்காளர்களைக் கொண்டதும், உலகப் புகழ்பெற்ற பத்துமலை முருகன் ஆலயம் அமைந்துள்ள தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதிலும் பெருமை கொள்கிறேன்.

ஆரம்பக் காலத்தில், ‘ஒரு இந்து அல்லாதவர் பத்துமலை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக வந்தால் பத்துமலைக்கு ஆபத்து’ என்று சிலர் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தினர்.

ஆனால், கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக நான் அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறேன். இன்று பத்துமலையில் தைப்பூசத் திருவிழா முன்பைவிட மிகுந்த சிறப்புடனும் விமரிசையாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதுமட்டுமன்றி, சிலாங்கூர் மாநிலத்தில் அதிகமான ஆலயங்களுக்கு நில உரிமையும் ஆண்டு மானியமும் வழங்கப்பட்டு வருகின்றன. சமய வளர்ச்சி மட்டுமல்லாமல், கல்வி, பொருளாதாரம், சமூக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அதற்குத் தேவையான மானியங்களையும் ஊக்குவிப்புகளையும் எங்கள் அரசாங்கம் வழங்கி வருகிறது.

எங்கள் அரசாங்கத்தில் எந்தக் குறையும் இல்லை என்று நான் கூறவில்லை. ஆனால், குறைகள் கண்டறியப்படும் போதெல்லாம் அவற்றை உடனுக்குடன் களைந்து, தவறுகளைத் திருத்திக்கொண்டு, அனைத்து மக்களும் நல்லிணக்கத்துடனும் நலமுடனும் வாழ தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.

இந்திய கலாச்சார விழாவில் அமிருடின் ஷாரி ஆற்றிய பொருள் பொதிந்த உரையையும், அவர் மகாபாரதத்தைப் படித்து அதிலுள்ள நீதிக் கருத்துகளை மேற்கோள் காட்டி பேசியதையும் கெஅடிலான் கட்சியின் தேசிய மகளிர் பிரிவு செயலாளர் ஜெ. சங்கீதா பாராட்டினார்.

சிலாங்கூர் மாநிலத்தில் அமிருடின் ஷாரி தலைமையிலான அரசாங்கம் செயல்படுத்தி வரும் ஆட்சிமுறையே பக்காத்தான் ஹரப்பான் அரசின் கொள்கை அமலாக்கத்திற்கான சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூரில் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் பல மக்கள் நலத் திட்டங்களை தற்போது மற்ற மாநிலங்களும் பின்பற்றத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, தமிழ்ப்பள்ளிகளுக்கும் ஆலயங்களுக்கும் வழங்கப்படும் மானியங்கள், ஆலயங்களுக்கான நில உரிமம் எந்தக் கட்டணமும் இன்றி அரசாங்க கெசட் மூலம் அங்கீகரித்து வழங்கும் நடைமுறை போன்றவை ஜோகூர் உள்ளிட்ட பல மாநிலங்கள் இப்பொழுது அமல்படுத்தி வருகின்றன..

மேலும், சிலாங்கூரில் பிறப்பு முதல் இறப்பு வரை வழங்கப்படும் பல்வேறு நலத்திட்டங்கள், கல்வி மற்றும் மருத்துவ உதவிகள், மாநிலம் முழுவதும் நடைபெறும் மலிவு விலை விற்பனைத் திட்டங்கள், வேலைக்குச் செல்லும் மகளிர்க்கான குழந்தைகள் பராமரிப்பு உதவித்தொகை, பாலர் பள்ளிக் கட்டண உதவி, இலவச பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்களின் பயனை ஜோகூர் மக்களும் பெற வேண்டுமெனில், பக்காத்தான் ஹரப்பானுக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பை வழங்க வேண்டும்.

மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் ஆட்சியைத் தொடர, ஜோகூர் மக்கள் பக்காத்தான் ஹரப்பானுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தேசிய மகளிர் பிரிவு செயலாளர் ஜெ. சங்கீதா கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles