
கிழக்குக் கடற்கரை மாநிலம் ஒன்றில் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்பட்ட போலியான சாலை பராமரிப்பு திட்டத்தில் முதலீடு செய்யும் பெயரில் ஏமாற்றப்பட்ட நிறுவன இயக்குநர் ஒருவர், RM10 மில்லியனை இழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கடந்த திங்கட்கிழமை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதாக பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் ஹூ சாங் ஹூக் தெரிவித்தார்.
ஆரம்பக்கட்ட விசாரணையில், கடந்த 2024ஆம் ஆண்டு, சாலை பராமரிப்பு திட்டத்தைப் பெறுவதற்கான கூட்டு முயற்சி (Joint Venture) வாய்ப்பை ஒருவர் நிறுவன இயக்குநருக்கு அறிமுகப்படுத்தியதாக தெரியவந்துள்ளது.
அந்தத் திட்டத்தில் பங்குதாரராக சேர்க்கப்படும் என்ற நம்பிக்கையில், பாதிக்கப்பட்டவர் சந்தேகநபரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு இரண்டு தவணைகளாக மொத்தம் RM10 மில்லியன் பணத்தை செலுத்தியுள்ளார்.
ஆனால், 2025ஆம் ஆண்டு மேற்கொண்ட சரிபார்ப்பில், அத்தகைய சாலை பராமரிப்பு திட்டமே இல்லையென்பது தெரியவந்தது.
இதையடுத்து, நிறுவன இயக்குநர் சந்தேகநபரிடம் விளக்கம் கேட்டபோது, அவர் பல்வேறு காரணங்களைக் கூறி காலதாமதப்படுத்தியதாகவும், தாம் மோசடிக்கு ஆளாகியிருப்பதை உணர்ந்த பின்னர் காவல்துறையில் புகார் அளித்ததாகவும் ஹூ சாங் ஹூக் தெரிவித்தார்.
இந்த வழக்கின் விசாரணை இன்னும் ஆரம்பக்கட்டத்தில் இருப்பதால், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்தச் சம்பவம் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420-ன் கீழ் (ஏமாற்றுதல்) விசாரிக்கப்பட்டு வருகிறது.
மேலும், வணிக மோசடி தொடர்பான வழக்குகளில் முழுமையான ஆவணங்கள் சேகரித்தல் மற்றும் சம்பந்தப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பிறகே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்களை உறுதிப்படுத்துவதற்காக இந்த நடைமுறை அவசியம் என்றும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.



