
திரெங்கானுவில் பிறை மற்றும் நட்சத்திரச் சின்னங்கள் இல்லாத நிலையில் ‘ஜாலூர் கெமிலாங்’ தேசியக் கொடி பறக்கவிடப்பட்ட சம்பவம் தொடர்பாக, அம்னோ இளைஞர் பிரிவு தொடர்ந்து மௌனம் காப்பது ஏன் என்று புக்கிட் ஜெலுதோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசியக் கொடி தொடர்பான விவகாரங்களில் இதற்கு முன்னர் அம்னோ இளைஞர் பிரிவு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ள நிலையில், தற்போது எந்தக் கருத்தையும் வெளியிடாமல் இருப்பது ஆச்சரியமளிப்பதாக அவர் கூறினார்.
“இந்தச் சம்பவம் பினாங்கில் நடந்திருந்தால், இந்நேரம் அது மிகப்பெரிய சர்ச்சையாக மாற்றப்பட்டிருக்கலாம். ஆனால் வேறு மாநிலத்தில் நடந்ததால் அம்னோ இளைஞர் பிரிவின் கண்ணில் படவில்லையா அல்லது அதைப் பற்றிப் பேச முடியவில்லையா?” என்று ராயர் கேள்வி எழுப்பினார்.
திரெங்கானுவின் Dataran Batu Buruk பகுதியில் பிறை மற்றும் நட்சத்திரச் சின்னங்கள் இல்லாத ‘ஜாலூர் கெமிலாங்’ பறக்கவிடப்பட்டதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி, இணையப் பயனர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விளக்கமளித்த திரெங்கானு மந்திரி பெசார் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் சம்சுரி மொக்தார், சம்பவம் வேண்டுமென்றே செய்யப்பட்டதல்ல என்றும், தற்செயலாக நிகழ்ந்ததாகவும் தெரிவித்திருந்தார். சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, இதுபோன்ற நிகழ்வு மீண்டும் ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இதனிடையே, சர்ச்சைக்குரிய தேசியக் கொடியில் பிறை மற்றும் நட்சத்திரச் சின்னங்கள் முதலில் இருந்ததாகவும், தையல் பிரிந்ததால் அந்தப் பகுதி கொடியிலிருந்து தனியாகக் கழன்று விழுந்ததாகவும் கோலா திரெங்கானு மாநகர மன்றம் விளக்கமளித்துள்ளது.
சம்பந்தப்பட்ட கொடி உடனடியாக அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக புதிய ‘ஜாலூர் கெமிலாங்’ ஏற்றப்பட்டதாக மாநகர மன்ற மேயர் தெரிவித்தார்.
இந்நிலையில், ஒரே மாதிரியான தேசியக் கொடி விவகாரங்களில் அரசியல் தரப்புகள் இரட்டை நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கக் கூடாது என்பதே ராயரின் விமர்சனமாக அமைந்துள்ளது.


