
தனது 79ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துகளையும், விரைவில் உடல்நலம் பெற பிரார்த்தனைகளையும் தெரிவித்த மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசி ராஜா சாரித் சோஃபியா ஆகியோருக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட அன்வார், பிறந்தநாள் வாழ்த்துகளுடன் தனது உடல்நலம் மற்றும் விரைவான குணமடைவிற்காக பிரார்த்தனை செய்த மாமன்னர் தம்பதியினரின் அன்புக்கும் அக்கறைக்கும் நன்றி தெரிவித்தார்.
“எனது பிறந்தநாளை நினைவுகூர்ந்து வாழ்த்து தெரிவித்ததுடன், நான் விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க பிரார்த்தனை செய்த மாமன்னருக்கும் பேரரசியாருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாமன்னர் தம்பதியினர் நீடூழி வாழ்க!” என்று அன்வார் குறிப்பிட்டார்.
கடந்த திங்கட்கிழமை 79ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய அன்வார், அதே நாளில் வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட ஹெர்னியா பாதிப்புக்கு திட்டமிடப்பட்ட லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சையையும் வெற்றிகரமாக மேற்கொண்டார்.
மருத்துவமனையில் தற்போது ஓய்வெடுத்து வரும் பிரதமர், தனது அறையில் மலர்க்கொத்துடன் புன்னகையுடன் இருக்கும் புகைப்படமும் வெளியிடப்பட்டது.
இதனிடையே, அமைச்சரவை உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பிரதமர் அன்வார் விரைவில் முழுமையாக குணமடைந்து பணிக்குத் திரும்ப வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


