
ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிப்பதா அல்லது அரசாங்கப் பதவிகளிலிருந்து விலகுவதா என்பது குறித்து ஜசெக (DAP) முக்கிய முடிவை எடுக்கவுள்ள நிலையில், அக்கட்சி ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிக்கவே முடிவு செய்யும் என்று நம்பிக்கை கூட்டணியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஜசெகவின் சிறப்பு மாநாட்டில் இந்த முக்கிய விவகாரம் குறித்து பிரதிநிதிகள் முடிவெடுக்கவுள்ளனர்.
தேசிய நலன் மற்றும் அரசியல் நிலைத்தன்மைக்கு ஜசெக முன்னுரிமை அளிக்கும் என்று தாம் உறுதியாக நம்புவதாக சைபுடின் தெரிவித்தார்.
“இந்த நாட்டில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வரும் ஒரு கட்சி என்ற வகையில், ஜசெக தலைமையிடம் அரசியல் அனுபவமும் முதிர்ச்சியும் உள்ளது. தற்போது சிறப்பாகச் சென்று கொண்டிருக்கும் நிர்வாகத் தொடர்ச்சியைப் பாதுகாப்பதுடன், நாட்டின் அரசியல் நிலைத்தன்மை மற்றும் தேசிய நலன்களையும் அக்கட்சி நிச்சயமாக முன்னிறுத்தும் என நம்புகிறேன்,” என்று உள்துறை அமைச்சருமான சைபுடின் கூறினார்.
இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சிறப்பு மாநாட்டில் மொத்தம் 4,264 ஜசெக பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.
தற்போதைய நாடாளுமன்றத்தின் எஞ்சிய பதவிக்காலத்தில் ஜசெக அரசாங்கப் பதவிகளில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா அல்லது அவற்றிலிருந்து விலக வேண்டுமா என்பது தொடர்பான முக்கிய முடிவை அவர்கள் எடுக்கவுள்ளனர்.
இதனால், ஜசெகவின் சிறப்பு மாநாடு அக்கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு மட்டுமின்றி, ஒற்றுமை அரசாங்கத்தின் எதிர்காலம் தொடர்பாகவும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.



