
சிலாங்கூர் மாநிலத்தின் வளர்ச்சி என்பது முதலீடு, மொத்த உள்நாட்டு உற்பத்தி அல்லது பெரிய திட்டங்களின் எண்ணிக்கையில் மட்டும் அளவிடப்படக் கூடாது; மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் உண்மையான மாற்றமே வளர்ச்சியின் வெற்றியாக இருக்க வேண்டும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் வலியுறுத்தினார்.
2026–2030 சிலாங்கூர் இரண்டாவது திட்டம் (Rancangan Selangor Kedua – RS-2) மீதான மாநில சட்டமன்ற விவாதத்தில் உரையாற்றிய அவர், விரிவான தொலைநோக்குத் திட்டத்தை முன்வைத்த சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் மாநில அரசாங்கத்திற்கு பாராட்டுகளைத் தெரிவித்தார்.
6 முக்கிய இலக்குகள், 25 முன்னுரிமைத் துறைகள் மற்றும் 98 முன்னெடுப்புகளை உள்ளடக்கிய இத்திட்டம், சிலாங்கூரை ஆசியான் பிராந்தியத்தின் முன்மாதிரி மாநிலமாக உருவாக்குவதுடன், சமமான பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டிருப்பதாக குணராஜ் குறிப்பிட்டார்.



