28.7 C
Kuala Lumpur
Monday, August 17, 2026

Vetri

மக்கள் நம்மைத் தேடி வருவார்கள் என காத்திருக்க வேண்டாம்; கெஅடிலான் மக்களை நேரடியாகச் சென்றடைய வேண்டும் – ரமணன்

🔥 Views : 2,697
👁 Reading Now : 43

கெஅடிலான் கட்சி மக்களின் குரல்களுக்கும் கவலைகளுக்கும் முன்னுரிமை அளித்து, அடிமட்ட அளவிலான பணிகளை மேலும் வலுப்படுத்துவதுடன், தனது குறைகளை ஏற்றுக்கொண்டு அவற்றைச் சரிசெய்யவும் துணிய வேண்டும் என்று கட்சியின் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் வலியுறுத்தியுள்ளார்.

ஒவ்வொரு தேர்தல் முடிவையும் வெற்றி அல்லது தோல்வியாக மட்டும் பார்க்காமல், மக்கள் கட்சிக்கு வழங்கும் ஒரு செய்தியாகவும், கட்சியின் அணுகுமுறையை மறுமதிப்பீடு செய்து பணிகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்பாகவும் பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.

ஆயர் கெரோவில் உள்ள மலாக்கா அனைத்துலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற 2026 கெஅடிலான் தேசிய மாநாட்டில், தலைவரின் கொள்கை உரை மீதான நிறைவுரையை ஆற்றிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது ரமணன் இதனைத் தெரிவித்தார்.

“மக்கள் நமக்கு என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்பதை நாம் செவிமடுக்க வேண்டும். நம்மிடம் குறைகள் இருந்தால் அவற்றைச் சரிசெய்து மேம்படுத்த வேண்டும். நாம் செய்த சில விஷயங்கள் இன்னும் மக்களைச் சென்றடையவில்லை அல்லது அதன் பயன்களை அவர்கள் உணரவில்லை என்றால், நாம் செயல்படும் முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் அலுவலகங்களில் இருந்து மக்கள் தங்களைத் தேடி வருவார்கள் என்று காத்திருக்கக்கூடாது என்றும் ரமணன் வலியுறுத்தினார்.

“மக்கள் நம்மைத் தேடி வருவார்கள் என்று காத்திருக்க வேண்டாம். நாம்தான் அவர்களை நேரில் சென்று சந்திக்க வேண்டும். அவர்களின் புகார்களைக் கேட்க வேண்டும். அவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு அதற்கான தீர்வுகளைக் கண்டறிய வேண்டும்,” என்றார்.

இதற்காக கெஅடிலானின் கிளை மற்றும் வட்டார அளவிலான செயல்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்றும், மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தற்போதுள்ள அனைத்து வழிமுறைகளையும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் ரமணன் கேட்டுக் கொண்டார்.

மக்களுடனான நேரடித் தொடர்பை வலுப்படுத்தி, அவர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்படுவதன் மூலமே கெஅடிலான் மீதான மக்களின் நம்பிக்கையை தொடர்ந்து வலுப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles