
மடானி அரசாங்கத்தில் ஜசெக (DAP) தொடர்ந்து நீடிக்க வேண்டும். ஆனால், பிரதமருக்கும் அரசாங்கத்திற்கும் கட்சி வழங்கும் ஆதரவை ‘வெற்று காசோலை’ (Blank Cheque) என்று கருத முடியாது என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ் வீரமான் வலியுறுத்தியுள்ளார்.
ஜசெக வெறுமனே அரசாங்கப் பதவிகளில் நீடிப்பதற்காகவோ அல்லது அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்காகவோ அரசாங்கத்தில் இணைந்திருக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.
மாறாக, மக்கள் மாற்றம், சீர்திருத்தம், நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் சிறந்த நிர்வாகத்தை எதிர்பார்த்து வாக்களித்ததன் அடிப்படையிலேயே ஜசெக அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக அவர் கூறினார்.
“அரசாங்கத்தில் இருப்பதால் நமது கொள்கைகளைக் கைவிட்டுவிட்டோம் என்று அர்த்தமல்ல. மாறாக, அதிகாரத்தில் இருப்பவர்களிடம் உண்மையை எடுத்துரைப்பதற்கும், பொறுப்புக்கூறலைக் கோருவதற்கும், சீர்திருத்தத் திட்டங்கள் வெறும் கோஷங்களாக மாறாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் நமக்கு இன்னும் பெரிய பொறுப்பு உள்ளது,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கான ஜசெகவின் ஆதரவு, யார் அதிகாரத்தில் இருக்கிறார்கள் அல்லது அரசியல் உறவுகள் எந்த அளவுக்குப் பேணப்படுகின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படக் கூடாது என்றும் கணபதிராவ் கூறினார்.
மாறாக, அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் எத்தனை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன, சீர்திருத்தங்கள் எந்த அளவுக்கு முன்னெடுக்கப்பட்டுள்ளன, அவற்றின் மூலம் மக்கள் உண்மையில் எந்த அளவுக்குப் பயனடைந்துள்ளனர் என்பதையே ஆதரவுக்கான அளவுகோலாகக் கொள்ள வேண்டும் என்றார்.
மடானி அரசாங்கத்தின் ஒரு பகுதியாக ஜசெக தொடர்ந்து செயல்பட வேண்டும்; அதேவேளை மக்களின் நலன், நல்லாட்சி, சீர்திருத்தம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் சமரசம் செய்யக்கூடாது என்பதே கட்சியின் நிலைப்பாடாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.



