
கட்சியின் எதிர்கால அரசியல் நிலைப்பாடு தொடர்பாக நிலவி வந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தற்போதைய நிர்வாகத்தின் பதவிக்காலம் முடியும் வரை ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிப்பதற்கு ஜசெக (DAP) பேராளர்கள் இன்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.
புத்ராஜயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ஜசெக சிறப்பு மாநாட்டில், கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோனி லோக் முன்வைத்த சிறப்புத் தீர்மானத்தின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஒற்றுமை அரசாங்கத்தில் ஜசெக தொடர்ந்து நீடிப்பதற்கு ஆதரவாக 1,857 பேராளர்கள் வாக்களித்த நிலையில், அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக 242 பேராளர்கள் வாக்களித்ததாக ராசா நாடாளுமன்ற உறுப்பினர் சா கீ சின் அறிவித்தார்.
ஜசெகவின் 1,704 கிளைகளைச் சேர்ந்த மொத்தம் 4,264 பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.
முன்னதாக நடைபெற்ற விவாதத்தின்போது, தற்போதைய அரசாங்கத்தின் சில செயல்பாடுகள் குறித்து அதிருப்திகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. இருப்பினும், பெரும்பாலான பேராளர்கள் கூட்டரசு அரசாங்கத்தில் ஜசெக தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து தற்போதைய சூழலில் வெளியேறுவது, அரசியல் நிலைமையை மேம்படுத்துவதற்குப் பதிலாக மேலும் சிக்கலாக்கக்கூடும் என்ற கருத்தும் மாநாட்டில் முன்வைக்கப்பட்டது.
இதையடுத்து, தற்போதைய ஆட்சிக்காலம் நிறைவடையும் வரை ஒற்றுமை அரசாங்கத்தின் ஒரு பகுதியாகத் தொடர்ந்து செயல்படுவது என்ற ஜசெகவின் நிலைப்பாடு பேராளர்களின் வாக்கெடுப்பு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.



