
உலகத் தமிழினத்தின் இறையோனும், குறிஞ்சி நில மன்னனுமான தமிழ்க்கடவுள் முருகப்பெருமானை, சமூக ஊடகமான ‘X’ வலைதளத்தில் ஆபாசமான வார்த்தைகளால் இழிவுபடுத்தி பதிவிட்ட தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த திரு.பிகில் மைக்கில் என்பவரின் செயலை மலேசிய தமிழ்ச்சமயப் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறதென அதன் செயல் பிரிவு ஒருங்கிணைப்பாளர் திரு.பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.
13 கோடி உலகத் தமிழர்களின் ஆன்மீக உணர்வுகளையும், பண்பாட்டு மரபையும் புண்படுத்தும் வகையில் அமைந்த இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது. உலகம் முழுவதும் போற்றி வணங்கப்படும் எம்பெருமான் முருகனை இவ்வாறு கொச்சைப்படுத்தும் அளவிற்கு எந்த அடிப்படையில் இந்தத் துணிச்சல் வந்தது என கேள்வி எழுப்பினர்.?
தான் தவெக அரசியல் கட்சியின் நிர்வாகி என்ற திமிரினாலும், அக்கட்சி ஆட்சியில் இருக்கிறது என்ற துணிவினாலுமே இத்தகைய இழிசெயல் நிகழ்ந்திருக்கிறது என்றார்.
சமீப காலமாக தமிழர்களின் உரிமை, உடைமை, மாண்பு, மரியாதை ஆகியவற்றிற்கு இக்கட்சியால் இழுக்கு ஏற்படுவதை பல்வேறு நிகழ்வுகளின் வழி நாம் காண முடிகிறது.
தமிழர்களின் முப்பாட்டனான முருகப்பெருமான் எங்களுக்கு வெறும் சேயோன் மட்டுமல்ல. அவர் எமது மூதாதை, மரபு, கலை, பண்பாடு, வரலாற்று அடையாளமாகும். உலகத் தமிழர்களின் இறைநம்பிக்கையை அவமதிக்கும் எந்தச் செயலையும் மலேசிய தமிழ்ச்சமயப் பேரவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
எனவே, தமிழ்நாடு அரசு திரு.பிகில் மைக்கில் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனி எக்காலத்திலும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென மலேசிய தமிழ்ச்சமயப் பேரவை சார்பில் திரு.பாலமுருகன் வீராசாமி வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.



